2017-08-02 14:43:00

சாம்பலில் பூத்த சரித்திரம் : தொடக்ககாலக் கிறிஸ்தவம்-பாகம் 4


ஆக.02,2017. கி.பி. 350ம் ஆண்டிலிருந்து, 2ம் கான்ஸ்டான்டியுஸ் மட்டுமே, சட்டமுறையான உரோமைப் பேரரசராக இருந்தார். இவர், தனது தந்தையான, பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் போன்றே, கிறிஸ்தவத்தில் ஆர்வமாக இருந்தார். இவர், திறமையானவராக இருந்தாலும், கிழக்கிலும், மேற்கிலும் பரந்து விரிந்திருந்த உரோமைப் பேரரசு முழுவதையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க மிகவும் கஷ்டப்பட்டார். அதனால், தனது உறவினர் ஜூலியனை Gaulலுள்ள உரோமைப் படைகளின் அதிகாரியாக, அதாவது சீசராக நியமித்தார். அப்போது ஜூலியனுக்கு வயது இருப்பத்தைந்து. ஜூலியனை இவ்வாறு நியமித்தது, பேரரசர் 2ம் கான்ஸ்டான்டியுசுக்கு மட்டுமல்ல, கிறிஸ்தவர்களுக்கும் ஆபத்தாக முடிந்தது. கி.பி. 359ம் ஆண்டில், பெர்சியாவுக்கு எதிரான போரில், ஜூலியனின் படைகளில் சிறந்தவைகளை கிழக்கு நோக்கி வருமாறு, 2ம் கான்ஸ்டான்டியுஸ் ஆணையிட்டார். ஆனால் அப்படைகள், பாரிசுக்கு அருகிலே முகாம் அமைத்து, ஜூலியனைப் பேரரசராக அறிவித்தன. எனவே இவரைச் சந்திக்க, பேரரசர் 2ம் கான்ஸ்டான்டியுஸ் மேற்கு நோக்கி வந்தபோது, ஆசியா மைனரில், கி.பி.361ம் ஆண்டில் இறந்தார். பின், ஜூலியன், உரோமைப் பேரரசரின் பேரரசரானார்.

ஜூலியன், உரோமைப் பேரரசரானபின், முந்தையப் பேரரசர்களால் தடைசெய்யப்பட்டிருந்த, பழங்கால உரோமை மற்றும் கிரேக்கக் கடவுள்கள் வழிபாட்டை மீண்டும் கொண்டு வந்தார். ஆனால், இந்த வழிபாட்டை அவர் எப்போது புகுத்தினார் என்பது உறுதியாகச் சொல்லமுடியவில்லை என, வரலாற்று ஆசிரியர்கள் சொல்கின்றனர். ஏனெனில், ஆரியுஸ் கொள்கையைப் பின்பற்றிய பேரரசர் கான்ஸ்சான்டியுசால், நாடு கடத்தப்பட்டிருந்த கத்தோலிக்க ஆயர்கள், மீண்டும் தங்களின் மறைமாவட்டங்களுக்குத் திரும்பி வரச் செய்திருந்தார் ஜூலியன். பின், கி.பி.362ம் ஆண்டில், அந்நியக் கடவுள்கள் கோவில்கள் மீண்டும் புத்துயிர் பெறுவதற்கு ஜூலியனே முன்னின்று உதவினார் மற்றும், அக்கடவுள்களுக்குப் பலிகளும் செலுத்தினார். இந்த வழிபாட்டை கிறிஸ்தவர்கள் எதிர்த்தனர். இதனால், ஜூலியன், பழங்கால கிறிஸ்தவ ஆலயங்களிலிருந்து, புனிதர்களின் திருப்பண்டங்களை அகற்றினார், கிறிஸ்தவ அருள்பணியாளர்கள் மீது சிறப்பு வரி விதித்தார். அரசுப் பணிகளில், அந்நியக் கடவுள்களை வழிபடுவோர்க்கு முன்னுரிமை கொடுத்தார். பேரரசர் கான்ஸ்டன்டைன், கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக வழங்கிய அத்தனை நடவடிக்கைகளையும், ஜூலியன் தலைகீழாக மாற்றினார். உரோமைப் பேரரசு முழுவதும் கிறிஸ்தவர்கள் பணியிலிருந்த இடங்களிலெல்லாம், பொய்த்தேவதைகளுக்கு வழிபாடு செலுத்தும் குருக்களும், அதிகாரிகளும் அமர்த்தப்பட்டனர்.

பேரரசர் கான்ஸ்டன்டைன், அந்தியோக்கியாவில் கட்டிய ஆலயத்தை மூடிவிடுமாறு  கி.பி. 362ம் ஆண்டில் உத்தரவிட்டார் ஜூலியன். கிறிஸ்தவர்கள், பள்ளிகளில் இலக்கியப் பாடங்களைக் கற்பிக்கக் கூடாதென்று ஆணையிட்டார். கிறிஸ்தவர்கள் நடத்திய பள்ளிகளை மூடினார். இயேசுவின் நற்செய்தி முற்றிலும் பொய் எனப் பிரச்சாரம் செய்தார். அன்று இயேசு, கோவிலைவிட்டு வெளியே சென்றுகொண்டிருந்தபோது அவருடைய சீடர்கள் கோவில் கட்டடங்களை அவருக்குக் காட்ட அவரை அணுகி வந்தார்கள். அவர் அவர்களைப் பார்த்து, “இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா! இங்கே, கற்கள் ஒன்றின்மேல் ஒன்று இராதபடி எல்லாம் இடிக்கப்படும் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (மத்.24,1-2)என்றார். இயேசு எருசலேம் கோவிலைப் பார்த்து, இறைவாக்காக முன்னறிவித்ததைப் பொய்யாக்கிக் காட்டுவேன் என, எருசலேம் ஆலயத்தை மீண்டும், கட்டத் தொடங்கினார் ஜூலியன். ஆனால், பெரும் தீச் சுடர்கள் தரையிலிருந்து கிளம்பி கட்டடப் பணியாளர்களையும், அங்கிருந்த கூட்டத்தினரையும் அழித்தது. இதனால் வேலை தடைபட்டது என, கிறிஸ்தவரல்லாத வரலாற்று ஆசிரியர், மார்சலேனியஸ் என்பவர் எழுதி வைத்துள்ளார்.

பேரரசர் ஜூலியன், பெர்சியாவோடு போர் தொடுத்தார். இந்தப் போரில் படுகாயமடைந்து, இரத்தம் பெருக்கெடுத்து ஓட, குதிரையிலிருந்து கீழே சரிந்தார். உயிர்பிரியும் நேரத்தில், “Vicisti, Galilaee”அதாவது “கலிலேயனே, நீயே வென்றாய்”, “கிறிஸ்துவே நீயே வென்றாய்” என்று சொல்லி, இறந்தார் எனச் சொல்லப்படுகிறது. 25 வயதில், மாபெரும் உரோமைப் பேரரசரான ஜூலியன், தனது இலக்கை நிறைவேற்றினரா என்பதைக் கேள்வியாக எழுப்பியுள்ளனர், வரலாற்று ஆசிரியர்கள். ஜூலியனின் மரணத்திற்குப் பின், உரோமைப் பேரரசின் எல்லைகளில் அமைதி நிலவியது. ஜூலியன் இறந்தபின், அரச குடும்பத்தைச் சார்ந்த ஜோவியன் என்பவரை, உரோமைப் பேரரசின் இராணுவம், பேரரசராகத் தேர்ந்தெடுத்தது. இவர், கி.பி. 363ம் ஆண்டு முதல், கி.பி.364ம் ஆண்டுவரை ஆட்சி செய்தார். மிகவும் நிதானத்துடன் ஆட்சிபுரிந்த ஜோவியன் காலத்தில், கிறிஸ்தவம் மீண்டும், பேரரசின் மதமாக அறிவிக்கப்பட்டது. ஜோவியன், பெரிய பெரிய சலுகைகளை வழங்கி, உரோமைப் பேரரசை ஆபத்தான சூழலிலிருந்து மீட்டார். மெசபத்தோமியா மற்றும், அர்மேனியாவின் பெரும் பகுதிகளை, பெர்சியாவுக்கு அளித்தார். இவர் பெர்சியாவுக்கு வழங்கிய இச்சலுகைகள், கான்ஸ்டான்டிநோபிளிலில் வெட்கத்துக்குரியதாக நோக்கப்பட்டது எனச் சொல்லப்படுகிறது. ஜோவியன் பேரரசரானபின், ஓராண்டுக்குள்ளே, இயற்கையான மரணம் அடைந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.