2017-08-02 14:54:00

தொற்றிக்கொள்ளக்கூடிய மகிழ்வால் நிறைந்த நற்செய்தி


ஆக.02,2018. "நற்செய்தி, தொற்றிக்கொள்ளக்கூடிய மகிழ்வால் நிறைந்துள்ளது, ஏனெனில், அது புதிய வாழ்வை தன்னுள் கொண்டிருப்பதோடு, அதை வழங்கவும் செய்கிறது" என்ற சொற்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியாக, இப்புதனன்று வெளியாயின.

மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதன் காலை ஒன்பது மணியளவில், அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தின் ஒருபுறம் அமைந்துள்ள அறையில், ஜெர்மனி நாட்டிலிருந்து வந்திருந்த கால்பந்தாட்ட வீரர்களைச் சந்தித்து வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.

Borussia Mönchengladbach என்றழைக்கப்படும் இந்த கால்பந்தாட்டக் குழுவினர், வத்திக்கானில் பணியாற்றும் தொழிலாளர்களுடன், அண்மைய ஆண்டுகளில் வளர்த்துவரும் நல்லுறவைக் குறித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவிப்பதாக, திருத்தந்தை, வீரர்களிடம் கூறினார்.

இதேவண்ணம், Borussiaவில், இளையோருக்காக, குறிப்பாக, வாய்ப்புக்கள் மறுக்கப்பட்ட இளையோருக்காக இந்த கால்பந்தாட்டக் குழுவினர் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு, தன் பாராட்டுக்களையும் நன்றியையும் தெரிவிப்பதாக திருத்தந்தை கூறினார்.

இவ்வுலகத்திற்கு மிகத் தேவையாக இருக்கும் நன்மை, அமைதி ஆகியவற்றை, விளையாட்டின் வழியே வளர்க்க, வீரர்கள் முன்வர வேண்டும் என்ற விண்ணப்பத்தையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.