2017-08-02 15:59:00

மறைக்கல்வியுரை : எதிர்நோக்கின் வாயில்கதவு, திருமுழுக்கு


ஒரு மாத விடுமுறைக்காலத்திற்குப்பின் திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரை, இம்மாதம் 2ம் தேதி, புதனன்று மீண்டும் துவங்கியது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால், இம்மாதத்தின் புதன் மறைக்கல்வியுரைகள் அனைத்தும் திருத்தந்தை, அருளாளர் 6ம் பவுல் அரங்கிலேயே இடம்பெறும் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்ததுபோல், இப்புதன் மறைக்கல்வியுரைக்கு செவிமடுக்க திருப்பயணிகளும் சுற்றுலாப்பயணிகளும் அவ்வரங்கை நிறைத்திருந்தனர். முதலில் தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலிலிருந்து, 'ஏனெனில், கிறிஸ்து இயேசுவின்மீது கொண்டுள்ள நம்பிக்கையால் நீங்கள் அனைவரும் கடவுளின் மக்களாய் இருக்கிறீர்கள். அவ்வாறெனில், கிறிஸ்துவோடு இணைந்திருக்கும்படி திருமுழுக்குப் பெற்ற நீங்கள் அனைவரும் கிறிஸ்துவை அணிந்து கொண்டீர்கள். இனி உங்களிடையே யூதர் என்றும் கிரேக்கர் என்றும், அடிமைகள் என்றும் உரிமைக் குடிமக்கள் என்றும் இல்லை; ஆண் என்றும் பெண் என்றும் வேறுபாடு இல்லை; கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள நீங்கள் யாவரும் ஒன்றாய் இருக்கிறீர்கள்', என்ற பகுதி வாசிக்கப்பட்டது. திருத்தந்தையும், இதே பகுதியை அடிப்படையாக வைத்து, 'கிறிஸ்தவ எதிர்நோக்கு என்ற மறைக்கல்வியின் தொடர்ச்சியாக, 'எதிர்நோக்கின் வாயில் கதவு, திருமுழுக்கு' என்ற தலைப்பில் உரை வழங்கினார்.

கிறிஸ்தவ எதிர்நோக்கு குறித்த நம் தொடர் மறைக்கல்வி உரையில் இன்று நாம், திருமுழுக்கு எனும் அருளடையாளம், முடிவற்ற வாழ்வின் வாயில் கதவு என்பது குறித்து, இன்று சிந்திப்போம். ஆதிகாலத் திருஅவையில், திருமுழுக்குப் பெறுவதற்கு தயாராக இருந்தோர், தங்கள் விசுவாச அறிக்கையை கிழக்கு நோக்கி நின்று வெளியிட்டனர், அதாவது, சூரியன் உதயமாவதை இயேசுவின் அடையாளமாகக் கண்டனர். நம் இன்றைய நவீன உலகம், இந்த விண்வெளி உருவகத்தை மறந்துபோயிருந்தாலும், இந்த அடையாளம் தன் வலிமையை, தாக்கத்தை இன்னும் கொண்டிருக்கிறது. கிறிஸ்தவர் என்பதன் அடையாளம்தான் என்ன? அதாவது, ஒருவித மூடுபனி நிலையையும் இருளையும் விரட்டியடிக்கும் ஒளியில் நம் நம்பிக்கையை வெளியிடும் கிறிஸ்தவரைக் குறித்து நிற்கிறது இது. திருமுழுக்கில் நாம் கிறிஸ்துவை அணிந்துகொள்வதன் வழியாக, ஒளியின் மக்களாக மாறுகிறோம். இந்த ஒளி, நமக்கு புது நம்பிக்கையைத் தருகிறது. இந்த ஒளியே, இறைவனை நம் தந்தையாகக் கண்டுகொள்ளவும், ஏழைகளிலும் பலவீனமானவர்களிலும் இயேசுவை அடையாளம் காணவும் உதவுகிறது. நாம் திருமுழுக்குப் பெற்றபோது, பாஸ்கா மெழுகுதிரியிலிருந்து பெறப்பட்ட ஒளியில் நம் கையிலிருந்த மெழுகுதிரியை ஏற்றினோம். இது, இயேசு, மரணத்தின்மீதும், இருளின்மீதும் கொண்ட வெற்றியின் அடையாளமாக இருந்தது. புதிய ஒளியுடன் பற்றியெரியும் திருஅவை வாழ்வின் அடையாளமாகவும் இது இருந்தது. கிறிஸ்தவர்களாகிய நாம், ஒளியின் மக்களாக மறுபிறப்பு அடைந்துள்ளோம் என்பதை ஒருவருக்கொருவர் நினைவூட்டுவோம். மற்றும், நம் திருமுழுக்கின் அழைப்புக்கு விசுவாசமுள்ளவர்களாக இருந்து, இயேசு கொணரும் புதிய நம்பிக்கையை, எதிர்நோக்கைப் பகிர்வோம்.

இவ்வாறு, தன் புதன் மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அனைவருக்கும் வாழ்த்துக்களை வழங்கியதுடன், அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.