2017-08-03 15:32:00

புதன் மறைக்கல்வி உரையில் உலகப் புகழ் பாடகர் பொச்செல்லி


ஆக.03,2018. ஆகஸ்ட் 2, இப்புதனன்று நடைபெற்ற திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரைக்குப் பின்னர், உலகப் புகழ்பெற்ற பாடகர், அந்திரேயா பொச்செல்லி (Andrea Bocelli) அவர்களோடு இணைந்து, 60க்கும் மேற்பட்ட இளையோர் அருளாளர் ஆறாம் பவுல் அரங்கத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தினர்.

பார்வைத்திறனற்ற பாடகர் பொச்செல்லி அவர்களின் ஆதரவால் உருவாக்கப்பட்ட "ஹெயிட்டியின் குரல்கள்" என்று பொருள்படும் “Voices of Haiti” என்ற பாடல் குழு, ஹெயிட்டி நாட்டின் சேரிகளில் வாழும் இளையோரைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

இக்குழுவினரோடு, பொச்செல்லி அவர்கள் இணைந்து, 'Amazing Grace' 'Ave Maria' உட்பட மூன்று புகழ்பெற்ற பாடல்களை திருத்தந்தையின் முன்னிலையில் பாடியபின், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்குழுவினரையும், பொச்செல்லி அவர்களையும் சந்தித்து பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

ஹெயிட்டி நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட Port-au-Prince நகருக்கு அருகே அமைந்துள்ள சேரிகளில் வாழும் இளையோருக்கு இசைப் பயிற்சி அளித்து, அவர்களை உலகின் பல நாடுகளுக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் பொச்செல்லி அவர்களின் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளதென CNA கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.

ஆதாரம் : CNA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.