2017-08-04 15:43:00

பாசமுள்ள பார்வையில்...: கொக்கென்று நினைத்தாயோ கொங்கணவா!


இளம் துறவி ஒருவர் காட்டிற்குச் சென்றார். அங்கு அவர் தியானம், வழிபாடு, யோகப்பயிற்சி போன்றவற்றில் நீண்ட காலம் ஈடுபட்டிருந்தார். அப்போது கொக்கொன்று அவர் தலைமீது எச்சமிட்டது. கோபத்துடன் அதனை அண்ணாந்துப் பார்த்ததும், கொக்கு எரிந்து கீழே விழுந்து சாம்பலானது. பார்வையாலேயே பறவைகளை எரிக்கும் தமது ஆற்றலைக் கண்டு, அவருக்குத் தலைகால் புரியாத மகிழ்ச்சி ஏற்பட்டது. சிறிது நேரத்திற்குப் பிறகு அந்தத் துறவி, உணவிற்காக அருகில் இருக்கும் ஊருக்குச் சென்றார். அங்கு ஒரு வீட்டின் முன் நின்று, ‘அம்மா, பிச்சை இடுங்கள்!’ என்று கேட்டார். ‘மகனே! கொஞ்சம் இரு’, என்று வீட்டின் உள்ளே இருந்து ஒரு குரல் வந்தது. இதைக் கேட்ட அந்தத் துறவி தனக்குள், ‘பெண்ணே, என் சக்தியை நீ அறியவில்லை! என்னைக் காக்க வைக்கிறாயே! உனக்கு எவ்வளவு தைரியம்!’ என்று எண்ணி முறைத்தார். இப்படி அவர் நினைத்ததுமே உள்ளே இருந்து, ‘மகனே, உன்னைப்பற்றி அவ்வளவு பெரிதாக நினைத்துக்கொள்ளாதே! இங்கே இருப்பது, கொக்கல்ல!’ என்று குரல் வந்தது. துறவி திகைத்துவிட்டார். அவள் கால்களில் வீழ்ந்து வணங்கிய துறவி, ‘அம்மா, நான் மனதில் நினைத்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?’ என்று வினவினார். அதற்கு அப்பெண்மணி, ‘மகனே, உன்னைப்போல் எனக்கு யோகமோ தவமோ எதுவும் தெரியாது. அன்றாடம் என் கடமைகளைச் செய்துகொண்டிருக்கும் ஒரு சாதாரணப் பெண் நான். என் கணவர் நோய்வாய்ப்பட்டிருக்கிறார். நான் அவருக்குப் பணிவிடை செய்துகொண்டிருந்தேன். அதனால்தான் உன்னைக் காக்க வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. நான் என் கடமைகளை வாழ்நாள் முழுவதும் மனப்பூர்வமாகச் செய்து வந்த காரணத்தால் என் ஞானக்கண் திறந்துவிட்டது. அதன் வழியாகத்தான் நான் உன் எண்ணங்களைப் புரிந்துகொள்ள முடிந்தது’, என்றார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.