2017-08-05 14:55:00

கர்தினால் Tettamanzi மரணம், திருத்தந்தை இரங்கல் தந்தி


ஆக.05,2017. இத்தாலியின் மிலான் உயர்மறைமாவட்ட முன்னாள் பேராயர் கர்தினால் தியோனிஜி தெத்தமான்சி (Dionigi Tettamanzi) அவர்கள், தனது 83வது வயதில், ஆகஸ்ட்,05, இச்சனிக்கிழமை காலையில் காலமானார்.

கர்தினால் தெத்தமான்சி அவர்களின் இறப்பையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவிக்கும், இரங்கல் தந்தி ஒன்றை, அவ்வுயர்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

கர்தினால் தெத்தமான்சி அவர்கள், நற்செய்திக்கும், அங்கோனா-ஓசிமோ, ஜெனோவா, மிலான் ஆகிய உயர்மறைமாவட்டங்களுக்கும் மகிழ்வோடு மறைப்பணியாற்றியவர், அருள்பணியாளர்கள் மற்றும் அனைத்து விசுவாசிகளின் தேவைகளுக்கு தன்னை முழுவதும் அர்ப்பணித்திருந்தவர், குடும்பம், திருமண வாழ்வு, அறநெறி வாழ்வு ஆகியவற்றில் சிறப்பான கவனம் செலுத்தியவர் எனப் பாராட்டியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அவரின் ஆன்மா நிறைசாந்தியடையச் செபிப்பதாகவும், தந்திச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

1934ம் ஆண்டு மார்ச் 14ம் தேதி, மிலான் உயர்மறைமாவட்டத்தின் ரெனாத்தே என்ற ஊரில் பிறந்த கர்தினால் தெத்தமான்சி அவர்கள், 1957ம் ஆண்டு அருள்பணியாளராகத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் கிரகோரியன் பாப்பிறை பல்கலைக்கழகத்தில் இறையியலில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், அங்கோனா-ஓசிமோ, ஜெனோவா ஆகிய உயர்மறைமாவட்டங்களில் பேராயராகப் பணியாற்றியபின், 2002ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டுவரை மிலான் உயர்மறைமாவட்டத்தின் பேராயராகப் பணியாற்றினார்.

1998ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி, புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் கர்தினாலாக உயர்த்தப்பட்டார் கர்தினால் தெத்தமான்சி.

நீண்டகாலமாக நோயுற்றிருந்த கர்தினால் தெத்தமான்சி அவர்களின் இறப்போடு திருஅவையில் மொத்த கர்தினால்களின் எண்ணிக்கை 223 ஆகவும், இவர்களில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடையவர்களின் எண்ணிக்கை 121 ஆகவும் மாறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.