2017-08-07 15:32:00

இயேசுவைச் சந்திக்க,சகோதரர்களுக்கு உதவ அழைக்கும் தோற்றமாற்றம்


ஆக‌.07,2017. "இஞ்ஞாயிறு நாம் சிறப்பித்த, இயேசுவின் தோற்றமாற்ற திருவிழா, இயேசுவை சந்திக்கவும், நம் சகோதரர்களுக்கு பணியாற்றவும் நமக்கு அழைப்புவிடுப்பதாக உள்ளது என தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐரோப்பா தற்போது அனுபவித்துவரும் கோடைவிடுமுறை குறித்தும் தன் மூவேளை செப உரையில் குறிப்பிட்டத் திருத்தந்தை, நம்முடைய ஆன்மீகப் பாதையை ஆழப்படுத்தவும், உடலுக்கும், ஆன்மாவுக்கும், புது சக்தியை வழங்கவும் உதவும் இந்த விடுமுறை காலத்தில், நோயாலும், பணியின் காரணமாகவும், பொருளாதார காரணங்களுக்காகவும், தங்கள் விடுமுறைக் காலத்தை வெளியில் சென்று அனுபவிக்க முடியாமல் இருக்கும் மக்களைக் குறித்து சிந்திப்போம் எனவும் கூறினார்.

அழகையும், வனப்பையும், மகிழ்வையும் நோக்கி இட்டுச் செல்லும், நற்செய்தி வழங்கும் அமைதியையும் புத்துணர்வையும் நாம் மீண்டும் கண்டுகொள்வோமாக, என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தாபோர் மலைக்கு மூன்று சீடர்களும் ஏறிச் சென்றது, நாமும் இவ்வுலக இன்பங்களை விட்டு விலகி, இயேசுவைக் குறித்து தியானிக்க மேலெழும்பிச் செல்லவேண்டும் என்பதைக் குறித்து நிற்கிறது எனவும் கூறினார்.

இயேசுவின் தோற்றமாற்றத்தைக் கண்ட சீடர்கள், மலையிலிருந்து இறங்கி வரும்போது, தங்கள் கண்களிலும் இதயத்திலும் மாற்றம் பெற்றவர்களாக திரும்பி வந்ததைப்போல், அவர்களின் பாதையை நாமும் பின்பற்றவேண்டும் என மேலும் அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.