2017-08-07 16:07:00

நைஜீரிய கோவில் தாக்குதல் குறித்து திருத்தந்தை தந்திச் செய்தி


ஆக‌.07,2017. இஞ்ஞாயிறன்று காலை திருப்பலியின்போது நைஜீரியாவின் Ozubulu, புனித பிலிப் கத்தோலிக்கக் கோவிலில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திருத்தந்தையின் அனுதாபங்களையும், செப உறுதியையும் வெளியிட்டு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், நைஜீரியாவின் Nnewi மறைமாவட்ட ஆயர் Hilary Paul Odili Okeke அவர்களுக்கு அனுப்பியுள்ள இரங்கல் தந்தியில், இத்துயரச் சம்பவம் இடம்பெற்ற Ozubulu பகுதி இருக்கும் Nnewi மறைமாவட்டத்தின் அனைத்து மக்களுக்கும், பாதிக்கப்பட்டோரின் உறவினர்களுக்கும், திருத்தந்தை, தன் அழ்ந்த அனுதாபங்களையும், செப உறுதியையும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு ஆறுதலையும், பலத்தையும் வழங்கும் வண்ணம், திருத்தந்தை அவர்கள், இறைவனின் ஆசீரை வேண்டுவதாகவும் அத்தந்திச் செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

நைஜீரியாவின் Ozubulu புனித பிலிப் கத்தோலிக்கக் கோவிலில், ஞாயிறு அதிகாலை திருப்பலியின்போது நடத்தப்பட்ட தாக்குதலில், 11 பேர் உயிரிழந்துள்ளனர், 18க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றுள்ளனர். தாக்குதலுக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.