2017-08-07 16:00:00

மியான்மாருக்குள் குடிபெயர்ந்துள்ள மக்களுக்கு திருஅவையின் பணி


ஆக‌.07,2017. மியான்மாரின் கச்சின் மாநிலத்தில் சுதந்திரம் கேட்டு இடம்பெற்றுவரும் மோதல்களால் குடிபெயர்ந்து, முகாம்களில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கிட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உள்ளதாக திருஅவை அங்கத்தினர்களிடம் உறுதியளித்துள்ளார் அந்நாட்டு மக்கள் தலைவர், Aung San Suu Kyi.

அரசுத் தலைவராகச் செயல்படுவதற்கு, முந்தைய இராணுவ அரசால் அனுமதி மறுக்கப்பட்டு, தற்போது, தேசிய ஆலோசகர் என்ற பதவியில் செயலாற்றிவரும் Aung San Suu Kyi அவர்கள், மியான்மாரின் கிறிஸ்தவ அங்கத்தினர்களை, தன் அலுவலகத்தில் சந்தித்தபோது, இந்த வாக்குறுதியை வழங்கினார்.

கச்சின் மாநிலத்தில், கச்சின் விடுதலை இராணுவம் என்ற அமைப்புக்கும், மியான்மாரின் இராணுவத்திற்கும் இடையே இடம்பெற்றுவரும் மோதல்களால், ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர்.

குடிபெயர்ந்துள்ள கச்சின் மக்களிடையே மியான்மார் கத்தோலிக்க திருஅவையின் கருணா மியான்மார் என்ற அமைப்பு பணியாற்றி, பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

கச்சின் மாநிலத்தில் வாழும் 17 இலட்சம் மக்களுள் பெரும்பான்மையினர் கிறிஸ்தவர்கள். இதில் ஒரு இலட்சத்து 16 ஆயிரம் கத்தோலிக்கர்களும் உள்ளனர்.

குடிபெயர்ந்துள்ள ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுள் 49 விழுக்காட்டினர் குழந்தைகள் என்கிறது ஐ.நா. நிறுவனம்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.