2017-08-07 15:47:00

வாரம் ஓர் அலசல் – பணமா, புகழா அல்லது கருணையா?


ஆக.07,2017. “சகிப்பற்ற சூழலில் காக்கப்படும் மௌனம் உடைக்கப்பட வேண்டும்”. இந்தத் தலைப்பில், இந்தியாவில் 101 அறிவாளர்கள் இணைந்து, கிறிஸ்தவத் தலைவர்களுக்குத் திறந்த கடிதம் ஒன்றை, ஆக.05, இச்சனிக்கிழமையன்று வெளியிட்டுள்ளனர். இந்தியாவின் பன்மைத்தன்மையும், சமயச்சார்பற்ற மற்றும், பொதுவுடமை கோட்பாடு போன்ற இந்திய அரசியலமைப்பின் விழுமியங்களும் காக்கப்பட வேண்டும். இந்தியச் சமுதாயம் காவிமயமாகிக்கொண்டு வருவதும், பிற சமயத்தவர்மீது, பெரும்பான்மை மதத்தவரின் சகிப்பற்றதன்மை அதிகரித்துவருவதும் நிறுத்தப்பட வேண்டும். 2014ம் ஆண்டுக்கும் 2016ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் மட்டும், கிறிஸ்தவர்க்கு எதிராக அறநூறுக்கும் மேற்பட்ட வன்முறைகள் இடம்பெற்றுள்ளன. 2014ம் ஆண்டில், தலித்துகளுக்கு எதிராக 47,064 வன்முறைச் செயல்கள் இடம்பெற்றன, 2010ம் ஆண்டில் இவ்வெண்ணிக்கை, 32,643 ஆக இருந்தது என, இந்திய தேசிய குற்றவியல் துறை பதிவு செய்துள்ளது.. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்து வருகின்றது. சிறுபான்மை மதங்களுக்கு எதிரான காழ்ப்புணர்வுகள், நாடாளுமன்ற உறுப்பினர்களாலும்கூட தூண்டி விடப்படுகின்றன... அன்பு, உண்மை மற்றும் நீதியில் நாடு வழிநடத்தப்பட வேண்டும்.. இவ்வாறு அந்த 101 அறிவாளர்களின் திறந்த கடிதம் கூறுகின்றது.

வாட்சப் நண்பர்கள் குழு ஒன்று, இவையெல்லாம் நடப்பது இந்தியாவில்தான் என, ஒரு செய்தியைப் பகிர்ந்துகொண்டுள்ளது.

நூறு ரூபாய் இலஞ்சம் வாங்கியவர் கைதாகும்போது, முகத்தைப் பொத்திக் கொண்டு செல்வதும், நூறு கோடி ஊழல் செய்தவர் கைதாகும்போது, டாட்டா காட்டியபடி சிரித்துக் கொண்டே செல்வதும் இந்தியாவில்தான்! பிக்பாக்கெட் அடித்தவருக்கு, சிறையில், கொசுக்கடியுடன் நாலைந்து பேர் தங்கும் சுகாதாரமற்ற அறையில் இடம் தருவதும், கோடி கோடியாய் ஊழல் செய்த வழக்கில் தண்டிக்கப்பட்டவருக்கு, தொலைக்காட்சி வசதியுடன் சொகுசு அறை தருவதும் இந்த நாட்டில்தான்! கஷ்டப்பட்டு பட்டப்படிப்பு படித்தவர் வேலையில்லாமல் திண்டாடுவதும், ஐந்தாம் வகுப்புகூட படிக்காமல், சாராயம் விற்றவரெல்லாம் கல்வி அமைச்சர் ஆகி, பல கல்லூரிகளை நடத்துவதும் இந்த நாட்டில்தான்! அரிசியை விளைவித்த விவசாயி, அரிசிக்காக ரேசன் கடையில் வரிசையில் நிற்பதும் இந்த நாட்டில்தான்! கோடிக்கணக்கில் வங்கிக் கடன்   வாங்கியவர், அதைக் கட்டாமல் வெளிநாட்டுக்குத் தப்பித்துச் செல்வதும், ஆயிரக்கணக்கில் கடன் வாங்கிய விவசாயி அதைக் கட்ட முடியாமல், விஷம் குடித்துச் சாவதும் இந்த நாட்டில்தான்! தண்ணீர் கேட்டு போராடுபவர்கள் மீது தடியடி நடத்துவதும்,  மதுவிலக்கை அமல்படுத்த அழுத்தம் கொடுத்தால், மதுக்கடைக்கு காவல்துறை பாதுகாப்பளிப்பதும் இந்த நாட்டில்தான்! தேசப்பிதாவைக் கொன்றவனை தேசத் தலைவனாகக் கொண்டாடுவதும், தேச நலனுக்காகப் போராடுபவர் மீது தேசத்துரோக வழக்குப் பாய்வதும் இந்த நாட்டில்தான்! தீருமா இந்த அவலநிலை என்ற ஆதங்கத்தோடு அந்தப் பகிர்வு வெளியிடப்பட்டிருந்தது. ஆனால், நாட்டில் அப்பாவி பொதுமக்களை நோகடிக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வந்தாலும், மக்களிடம் விழிப்புணர்வும் அதிகரித்து வருகின்றது என்பதையும் மறுக்க இயலாது.

ஒரு கணவனும், மனைவியும் செருப்பு கடைக்குச் சென்றார்கள். கணவன் எல்லா செருப்புகளையும் பார்த்துவிட்டு, ஒரு 900 ரூபாய் மதிப்புள்ள அழகிய செருப்பைத் தேர்ந்தெடுத்தார். அந்த 900 ரூபாய் மதிப்புள்ள செருப்பினை பில் போடப்போகும் சமயம் பார்த்து, அவர், தனக்கு இடதுகால் செருப்பு மட்டும் போதும், அதற்கு 450 ரூபாய் தருவதாகவும், அதற்கு மட்டும் பில் போட வேண்டும் என்று கூறினார். அதைக் கேட்டு அதிர்ந்த கடைக்காரர், ஏன் என்று கேட்டார். 500 ரூபாய்க்கு மேல் உள்ள செருப்புக்கு ஜிஎஸ்டி ரொம்ப அதிகம் என்றார். அதுசரி, அப்ப வலதுகால் செருப்பை என்ன செய்வது என்று கேட்டார் கடைக்காரர். அதுவரை அமைதியாக இருந்த அவரின் மனைவி, அதை நான் வாங்கிக் கொள்கிறேன். 450 ரூபாய்க்குத் தனியாக, எனக்கு பில் போடுங்கள் என்றார். கடைக்காரர் ரொம்பவே குழம்பி விட்டார். அதற்கு அந்தத் தம்பதியர், ஒரு விளக்கம் கொடுத்தனர். 900 ரூபாய்க்கு பில் போட்டால், ஜிஎஸ்டி வரி 162 ரூபாய் கட்ட வேண்டும். 450 ரூபாய் + 450 ரூபாய் என, இரண்டு பில்லாக போட்டால் 22.50 ரூபாய் + 22.50 ரூபாய் மட்டுமே வரியாகப் போட முடியும் என்று கூறினர்.

நாடுகளில் அரசியல் கூத்துக்களை நடத்துவோரையும், உலகை அடக்கிஆள நினைத்துச் செயல்படுவோரையும், பார்க்கும்போது, பணம், புகழ், பதவி இவையெல்லாம், நிரந்தரமாக இருந்து, இறந்தபின்னும் கூடவே வரும் என்ற நினைப்பு அவர்களுக்கு உள்ளதோ என்று அஞ்ச வைக்கின்றது. ஏழிசை மன்னர் தியாகராஜ பாகவதர், புதுக்கோட்டை பி.யூ.சின்னப்பாவின் துணைவியார், விஸ்கோஸ் நிறுவன உரிமையாளர் பாரிஸ் வெங்கடசாமிநாயுடு... பணம், புகழ் இவற்றில் எதிலும் குறையின்றி வாழ்ந்த இவர்களைப் போன்றவர்களது இறுதிக்காலம் எப்படி அமைந்திருந்தது என்பது பலருக்குத் தெரியும். தியாகராஜ பாகவதர் அவர்கள், 14 திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர். 1944ம் ஆண்டில் வெளிவந்த இவரின் சாதனைப் படமான ஹரிதாஸ், மூன்று வருடம் ஒரே திரையரங்கில் ஓடி, மூன்று தீபாவளிகளைக் கண்ட ஒரே இந்தியப் படம். இந்திய வரலாற்றில் தங்கத்தட்டில் சாப்பிட்டவர் இவர். போர் தொடங்கப் போகிறது. ஏதாவது உதவி செய்யுங்கள் என்று வெள்ளையர்கள் கேட்டபோது, நாடகம், கச்சேரி நடத்திக் கொடுத்து இவர் உதவினார். போர் முடிந்தது. இதற்குக் கைம்மாறாக வெள்ளையர்கள் 250 ஏக்கர் நிலத்தை இலவசமாகக் கொடுக்க முன்வந்தார்கள். ஆனால், என் மண்ணிலே இருந்துகொண்டு, என் மண்ணையே கூறுபோட்டுக் கொடுக்கிறாயா, என் மொத்த நாட்டையே கொடு என வெள்ளையரிடம் கேட்டவர் பாகவதர். கலையுலகில் முடிசூடா மன்னராக வலம்வந்த பாகவதர், தன் கடைசிக் காலத்தில் மிகவும் கஷ்டப்பட்டார். நண்பர்கள் யாரும் அவருக்கு உதவ முன்வரவில்லை. 1959ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி, சென்னை பொது மருத்துவமனையில் காலமானபோது, இவரின் உடலை 110 ரூபாய் கொடுத்து எடுப்பதற்கு ஆள்வரவில்லையாம்.

இதுதான் புகழ். பணம் பதவி எதுவுமே நிரந்தரமில்லை என்பதற்கு, எத்தனையோ பேரை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். உனக்காகச் சிரிக்கும் உதடுகளைவிட, உனக்காக கண்ணீர்விடும் கண்களை நேசி. அது உப்பாக இருந்தாலும் உண்மையாக இருக்கும் என்கிறார்கள். நாம் பிறந்தபோது யார் யார் வந்து நம்மைப் பார்த்தார்கள் என நமக்குத் தெரியாது. நாம் இறக்கும்போது யார் யார் வந்து பார்க்கப் போகிறார்கள் என்பதும் நமக்குத் தெரியாது. எனவே இருக்கும்வரை அனைத்து மனிதரிடமும் அன்பாக இருக்க வேண்டும். மனித நேயத்துடன் பழகி, மனிதனாக வாழ வேண்டும்.

பொது விநியோகப் பொருட்கள் கையிருப்பில் இருக்கும்போதே தீர்ந்துவிட்டதாகப் பொதுமக்களைத் திருப்பி அனுப்புவது, ரேஷன் பொருள்களைப் பெற வரும்போது ஆதார் கட்டாயம் என்று கூறி, பொருள்களை வழங்க மறுப்பது அல்லது ரேஷன் அட்டையுடன் ஆதாரை இணைக்கப் பணம் பெறுவது ஆகியவை, தமிழகத்தில் ரேஷன் கடைகளில், பெரும்பாலான பழக்கமான ஒன்று. ஆனால், 'கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள, தாக்கட்டி. கிராமத்தில், பொது விநியோக சேவையின் மேற்பார்வையாளராகப் பணியாற்றிய, இல்லை சேவையாற்றியவர் நாகராஜன் அவர்கள் என்று ஊரே கொண்டாடுகிறது. 53 வயதான நாகராஜன் அவர்கள், நேர்மையான ரேஷன் கடை அதிகாரி என, ஊடகங்களில் பாராட்டப்பட்டுள்ளார். மாவட்டத்தின் பின் தங்கிய பகுதிகளில் ஒன்றான தளி வட்டத்தில் இருக்கும் ஏறத்தாழ 1,350 ஏழைக் குடும்பங்களுக்கு விரைவாகவும், சீராகவும் ரேஷன் பொருள்களைப் பெற்றுத் தந்தவர் நாகராஜன். இவரது கடையில் ஒருவர் ஒருமுறை வந்தாலே போதும். அவர் அனைத்துப் பொருள்களையும் வாங்கிச் செல்ல முடியுமாம். இதற்காக அனைத்து அட்டைதாரர்களின் தொலைபேசி எண்களையும் வாங்கி வைத்துவிடுவார் நாகராஜன். பொருள்கள் வந்தபிறகு, அனைவருக்கும் தகவல் சொல்லி, அரசு வழங்கிய எல்லாப் பொருள்களையும் ஒரேமுறையில் வழங்கிவிடுவது அவரின் வழக்கமாம். அத்துடன் கடைசித் தேதி வரை பொருள்கள் வாங்காதவர்களுக்கு நினைவுபடுத்துவாராம் யாரும் பொருள்கள் கிடைக்காமல் பட்டினியாக இருக்கக்கூடாது என்பது இவரது கொள்கையாம்.  2009-ம் ஆண்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை. நாகராஜன் நோயுற்ற தன் மகனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தார். அந்த நேரம் பார்த்து ஆய்வு மேற்கொள்ள வந்த மாவட்ட ஆட்சியர், கடை மூடியிருப்பதைப் பார்த்து கடைக்கு சீல் வைக்க உத்தரவிட்டார். கைவசம் பூட்டு இல்லாததால், அதிகாரிகள் கிராம மக்களிடம் பூட்டைக் கேட்டனர். ஆனால் ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து, பூட்டு வழங்க மறுத்தனர். பின்னர் எங்கிருந்தோ ஒரு பூட்டைப் பெற்ற அதிகாரிகள், கடைக்கு சீல் வைத்துச் சென்றனர். ஆனால் அதற்கு அடுத்த நாள் நாகராஜனைப் பற்றிக் கேள்விப்பட்ட மாவட்ட ஆட்சியர், நாகராஜனிடம் புன்னகையுடன் சாவியைக் கொடுத்து, அவரின் நேர்மையையும் பாராட்டினாராம். நாகராஜன் அவர்கள் சம்பாதித்தது கிராம மக்களாகிய எங்களின் அன்பை மட்டுமே என, அக்கிராம மக்கள் சொல்லியுள்ளனர்.

அன்பு, கருணை, தியாகம், நேர்மை, உண்மை, பக்தி, ஒழுக்கம், மனத்துாய்மை ஆகிய நற்குணங்களே, எவ்வித சேதமும் இன்றி நம்மை என்றென்றும் பின்தொடரும். லாப நஷ்டக் கணக்குப் பார்க்கும் வியாபாரம் அல்ல வாழ்க்கை. ஆனால், நம்மால் இயன்ற நன்மையைப் பிறருக்குச் செய்வதே வாழ்வின் நோக்கமாகும். எதையும் எடுத்துச் சொல்வதைவிட, மற்றவர் முன் எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கதாகும்.

பணமா,  புகழா, கருணையா? எது நிரந்தரம்? நம்மையே கேட்டுப் பார்ப்போம்.

வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.