2017-08-08 15:22:00

அடுத்த ஆசிய இளையோர் நாள் 2020ல் இந்தியாவில்


ஆக.08,2017. அடுத்த ஆசிய இளையோர் நாள், 2020ம் ஆண்டில், இந்தியாவில் நடைபெறும் என, ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான கர்தினால், ஆசுவால்டு கிரேசியஸ் அவர்கள் அறிவித்துள்ளார்.

இந்தோனேசிய நாட்டின் யோக்யகார்த்தாவில் நடைபெற்ற 7வது ஆசிய இளையோர் நாளின் நிறைவுத் திருப்பலியை தலைமையேற்று நிறைவேற்றிய, மும்பை பேராயர் கர்தினால் கிரேசியஸ் அவர்கள், இத்திருப்பலியின் இறுதியில், 8வது ஆசிய இளையோர் நாள், 2020ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெறும் என அறிவித்தார்.

ஆகஸ்ட் 06, இஞ்ஞாயிறன்று நடைபெற்ற இத்திருப்பலியில், கர்தினால் கிரேசியஸ், இந்தியத் திருஅவையின் சில அதிகாரிகள், மற்றும், சில இந்திய இளையோர் பிரதிநிதிகள், மூங்கிலால் எளிமையாகச் செய்யப்பட்ட ஆசிய இளையோர் நாள் சிலுவையை, இந்தோனேசிய இளையோரிடமிருந்து பெற்றனர்.

இரண்டு, மூன்று அல்லது ஐந்து ஆண்டுகள் இடைவெளியில் சிறப்பிக்கப்படும் ஆசிய இளையோர் நாள், முதன் முதலில், 1999ம் ஆண்டில், தாய்லாந்தின் ஹூவா ஹின் நகரில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இந்நாள், தாய்வானின் தாய்பேய் நகரில் 2001ம் ஆண்டிலும், இந்தியாவின் பெங்களூருவில் 2003ம் ஆண்டிலும் நடைபெற்றது. 2006ம் ஆண்டில் ஹாங்காங்கிலும், 2009ம் ஆண்டில் பிலிப்பீன்சிலும், 2014ம் ஆண்டில் தென் கொரியாவிலும், ஆசிய இளையோர் நாள் சிறப்பிக்கப்பட்டது.

யோக்யகார்த்தாவில், ஆகஸ்ட் 2ம் தேதி ஆரம்பித்த 7வது ஆசிய இளையோர் நாள், ஆகஸ்ட் 6ம் தேதியோடு நிறைவடைந்தது. இந்நிகழ்வில், 6 கர்தினால்கள், 52 ஆயர்கள், 158 அருள்பணியாளர்கள், 41 இருபால் துறவியர் உட்பட, இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட இளையோர், 21 ஆசிய நாடுகளிலிருந்து கலந்துகொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.