2017-08-09 16:50:00

151 ஆண்டுகளுக்கு பின் உரிமையாளரிடம் திரும்பிய விவிலியம்


ஆக.09,2017. அமெரிக்காவிலிருந்து 3,500 மைல்கள் பயணம் செய்து, 151 ஆண்டுகள் பழமையான விவிலியம் ஒன்று, அதன் உரிமையாளர்களான ஸ்காட்லாந்து குடும்பத்தின் வம்சாவழியினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விவிலியத்தின் தற்போதைய உரிமையாளரான அமெரிக்காவைச் சேர்ந்த மார்ஷல் வைட்ஹெட், (Marshall Whitehead) அவர்கள், அதன் உண்மையான உரிமையாளர்களை கண்டுபிடித்து விவிலியத்தை திருப்பி அளித்துள்ளார்.

ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரைச் சேர்ந்த 66 வயதான டொனால்ட் மெக்கெக்னி (Donald Mackechnie) அவர்களிடம் இந்த பழமையான விவிலியம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த விவிலியம் மெக்கெக்னியின் கொள்ளுப்பாட்டிக்கு சொந்தமானது.

ஓஹையோ மாநிலத்தின் கிளீவ்லேண்ட் நகரத்தைச் சேர்ந்த, பழமையான விவிலியம் சேகரிப்பாளர் ஒருவர், 2001-ஆம் ஆண்டு வைட்ஹெட் அவர்களுக்கு இந்த விவிலியத்தை அன்பளிப்பாக அளித்துள்ளார்.

இந்த விவிலியத்தில் `1 ஜனவரி 1866` என தேதியிட்டு, அலெக்சாண்டர் என்பருக்கு அன்பளிப்பாக அளிக்கப்பட்டது என்ற தகவல் இருந்துள்ளது. இதனைத் தொடர்ந்து 1825-ம் ஆண்டு பிறந்து, கப்பலில் பணியாற்றிய, மெக்டொனால்டு என்பவரின் தற்போதைய சந்ததியினரை தேடிக் கண்டுபிடிக்க, வைட்ஹெட் அவர்கள் முடிவு செய்துள்ளார்.

தங்கள் குடும்பத்தின் பாரம்பரிய சொத்து ஒன்று கிடைத்ததை நினைத்து மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் உள்ளது எனவும், இன்னும் நல்ல மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார்கள் என்பதை, இந்நிகழ்வு உணர்த்துவதாகவும், ஸ்காட்லாந்து கோவிலில் எழுத்தராக பணியாற்றி வரும் மெக்கெக்னி அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : பிபிசி / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.