2017-08-09 16:15:00

திருத்தந்தை: "கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருப்பதே முக்கியம்"


ஆக.09,2017. "விசுவாசத்திற்கு சான்று பகரும்போது, அதில் வெற்றியடைவதைவிட, கிறிஸ்துவுக்கு விசுவாசமாக இருப்பதே முக்கியம்" என்ற கருத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆகஸ்ட் 9, இப்புதனன்று, தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

இரண்டாம் உலகப்போரின்போது, ஆஷ்விட்ச் வதை முகாமில் கொல்லப்பட்ட கார்மேல் துறவு சபை அருள் சகோதரியும் புனிதருமான சிலுவையின் தெரேசா பெனதிக்தா அவர்களின் திருநாள், இப்புதனன்று கொண்டாடப்படுவதையொட்டி, திருத்தந்தை இச்செய்தியை வெளியிட்டுள்ளார்.

1891ம் ஆண்டு போலந்து நாட்டில் ஒரு யூத குடும்பத்தில் பிறந்து, எடித் ஸ்டெயின் (Edith Stein) என்ற இயற்பெயருடன் வாழ்ந்த இவர், 1922ம் ஆண்டு, கத்தோலிக்கத் திருஅவையில் திருமுழுக்கு பெற்று, பின்னர், 1934ம் ஆண்டு கார்மேல் சபையில் சேர்ந்தார்.

1938ம் ஆண்டு, தன் இறுதி அர்ப்பணத்தை நிறைவேற்றிய எடித் ஸ்டெயின் அவர்கள், சிலுவையின் தெரேசா பெனதிக்தா என்ற பெயரை ஏற்றுக்கொண்டு, துறவு வாழ்வைத் தொடர்ந்தார்.

1942ம் ஆண்டு, ஆகஸ்ட் 2ம் தேதி, நாத்சி படையினரால் கைது செய்யப்பட்டு, ஆஷ்விட்ச் வதை முகாமில், நச்சு வாயு உலையில், ஆகஸ்ட் 9ம் தேதி கொல்லப்பட்ட இவரை, 1998ம் ஆண்டு, திருத்தந்தை புனித 2ம் ஜான் பால் அவர்கள் புனிதராக உயர்த்தியதோடு, ஐரோப்பிய நாடுகளின் பாதுகாவலர்களில் ஒருவராகவும் அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.