2017-08-10 16:26:00

ஆகஸ்ட் 10, தலித் கிறிஸ்தவர்களின் 'கறுப்பு நாள்' போராட்டம்


ஆக.10,2017. இந்தியாவில் வாழும் தலித் மக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள், தலித் கிறிஸ்தவர்களுக்கும், தலித் முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்த, ஆகஸ்ட் 10, இவ்வியாழன், புது டில்லியில் போராட்டம் ஒன்று நடைபெற்றது.

இந்திய ஆயர் பேரவை, தேசிய கிறிஸ்தவ சபைகளின் குழு, தேசிய தலித் கிறிஸ்தவக் கழகம் ஆகிய மூன்றும் இணைந்து, இந்த 'கறுப்பு நாள்' போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

1950ம் ஆண்டு, ஆகஸ்ட் 10ம் தேதி, இந்தியாவின் முதல் அரசுத்தலைவர், இராஜேந்திர பிரசாத் அவர்கள், ஒடுக்கப்பட்ட பிரிவில், இந்துக்களுக்கு மட்டுமே இடம் உண்டு என்று உருவாக்கப்பட்டிருந்த சட்டத்தில் கையொப்பம் இட்டதனால், ஆகஸ்ட் 10ம் தேதியை, 'கறுப்பு நாள்' என்று கடைபிடிக்க தீர்மானம் எடுக்கப்பட்டது.

கடந்த 67 ஆண்டுகளாக, தலித் கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் சேரவேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டு வருவதால், இந்தப் போராட்டத்தில் அனைத்து கிறிஸ்தவர்களும், இஸ்லாமியரும் இணைந்து வரவேண்டும் என்று இந்திய ஆயர் பேரவையின், ஒடுக்கப்பட்ட மக்கள் பணிக்குழுவின் தலைவர், ஆயர் நீதிநாதன் அந்தோனிசாமி அவர்கள் அழைப்பு விடுத்திருந்தார்.

ஒடுக்கப்பட்ட இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள் ஆகியோருக்கு வழங்கப்படும் உரிமைகள் அனைத்தும், ஒடுக்கப்பட்ட கிறிஸ்தவர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதை முன்னிறுத்தி, இந்தியாவின் பல்வேறு மாநில தலைநகர்களில், 'கறுப்பு நாள்' போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.

புது டில்லியில் இவ்வியாழன் மாலை நடைபெற்ற 'கறுப்பு நாள்' போராட்டத்தில், டில்லி பேராயர், அனில் கூட்டோ அவர்கள் கலந்துகொண்டார் என்று, இந்திய ஆயர் பேரவையின், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பணிக்குழுவின் செயலர் அருள்பணி தேவசகாயராஜ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : CBCI / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.