2017-08-10 16:32:00

எர்பில் நகரில் மீண்டும் தோமினிக் சபை அருள் சகோதரிகள்


ஆக.10,2017. ஈராக்கின் நினிவே சமவெளியிலிருந்து விரட்டப்பட்டு மூன்று ஆண்டுகள் வெளியே தங்கியிருந்த தோமினிக் துறவு சபை அருள் சகோதரிகள், தங்களுக்குச் சொந்தமான துறவு இல்லத்திற்கு திரும்பியுள்ளனர் என்று, CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

எர்பில் நகரில் பணியாற்றிவந்த தோமினிக் சபை அருள் சகோதரிகள், மூன்றாண்டுகளுக்குமுன் இரவோடு இரவாக தங்கள் மடங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்பட்டனர் என்று கூறும் இத்துறவு சபை தலைவி, தாங்கள் மறுபடியும் தங்கள் மடத்திற்குத் திரும்புவோம் என்ற நம்பிக்கையுடன் அங்கிருந்து புறப்பட்டதாகக் கூறியுள்ளார்.

தங்கள் மடத்திலும், குறிப்பாக தங்கள் சிற்றாலயத்திலும் இஸ்லாமிய தீவிரவாதிகள் செய்திருந்த அழிவு, மனதிற்கு வருத்தத்தை அளித்தாலும், தங்கள் இல்லத்தையும், சுற்றியுள்ள மக்களின் இல்லங்களையும் மீண்டும் கட்டியெழுப்ப இறைவன் வழங்கிய வாய்ப்பிற்காக நன்றி சொல்வதாக இச்சகோதரிகள் கூறியுள்ளனர்.

பெற்றோரை இழந்த குழந்தைகளுக்காக இச்சகோதரிகள் நடத்திவந்த இல்லத்தை இஸ்லாமிய தீவிரவாதிகள் தீயிட்டு, முற்றிலும் அழித்துவிட்டனர் என்றும், அதனை கட்டியெழுப்புவதே தங்கள் முதல் பணி என்றும் தோமினிக் சபை சகோதரிகள் கூறியுள்ளனர்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.