சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரேசாவுக்கு அரசுத்தலைவர்கள் அஞ்சலி

தொழுநோயாளர் மத்தியில் சேவையாற்றிய மருத்துவரான அருள்சகோதரி Pfau - RV

11/08/2017 15:21

ஆக.11,2017. பாகிஸ்தான் நாட்டில், தொழுநோயாளர் மத்தியில், தன் வாழ்வு முழுவதும் சேவையாற்றி, மரணமடைந்துள்ள ஜெர்மன் நாட்டு அருள்சகோதரி Ruth Pfau அவர்களுக்கு, பாகிஸ்தான் அரசுத் தலைவர்கள், தங்களின் இறுதி மரியாதையைச் செலுத்தினர்.

பாகிஸ்தான் நாட்டு அன்னை தெரேசா என அழைக்கப்படும் அருள்சகோதரி Pfau அவர்கள், முதுமையில் ஏற்படும் பிரச்சனைகளால், தனது 87வது வயதில், கராச்சி, Aga Khan மருத்துவமனையில், ஆகஸ்ட் 10, இவ்வியாழனன்று காலமானார்.

பாகிஸ்தான் அரசுத்தலைவர் Mamnoon Hussein, பிரதமர் Shahid Khaqan Abbasi உட்பட, பாகிஸ்தான் அரசுத் தலைவர்கள், மருத்துவரான அருள்சகோதரி Pfau அவர்களுக்கு, தங்களின் இரங்கல் செய்திகளை வெளியிட்டு, அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

மருத்துவரான அருள்சகோதரி Pfau அவர்கள், ஜெர்மனியில் பிறந்திருந்தாலும், அவரின் இதயம் எப்போதும் பாகிஸ்தானில்தான் இருந்தது என, புகழாரம் சூட்டியுள்ள, பிரதமர் Khaqan Abbasi அவர்கள், கராச்சி பேராலயத்தில் நடைபெறும் இச்சகோதரியின் அடக்கச் சடங்கு, அரசு மரியாதையுடன் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். 

1929ம் ஆண்டில் பிறந்த அருள்சகோதரி Pfau அவர்கள், முன்னாள் கிழக்கு ஜெர்மனியிலிருந்து தப்பித்து மேற்கு ஜெர்மனி சென்று, 1950களில் பல்கலைக்கழகங்களில் மருத்துவம் படித்தார். மரியின் திருஇதய சபையில் சேர்ந்த இவர், அச்சபையால் இந்தியாவுக்குப் பணியாற்ற அனுப்பப்பட்டார். ஆனால், இந்தியாவுக்குள் நுழைவதற்கான அனுமதி பிரச்சனைகளால், 1960ம் ஆண்டு மார்ச் 8ம் தேதி கராச்சியில் தங்கினார். அன்றிலிருந்து கராச்சியில் தொழுநோயாளர் மத்தியில் தன் பணியைத் தொடங்கினார். 1961ம் ஆண்டில், தமிழகத்தின் வெல்லூர் சென்று, ஹான்சென் நோயாளர் எனப்படும், தொழுநோயாளர் மத்தியில் பணியாற்ற பயிற்சியும் பெற்றார்.

அருள்சகோதரி Pfau அவர்களின் அடக்கச் சடங்கு, ஆகஸ்ட் 19ம் தேதி, கராச்சி புனித பாட்ரிக் பேராலயத்தில், அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

11/08/2017 15:21