2017-08-11 14:58:00

கருணைக்கொலைக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்திக்கொள்ள...


ஆக.11,2017. பெல்ஜிய நாட்டில், மனநலம் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிக்கும் மையங்களில் பணியாற்றிவரும் பிறரன்பு சபையின் அருள்சகோதரர்கள், கருணைக்கொலைக்கு ஆதரவு வழங்குவதை நிறுத்திக்கொள்ள வேண்டுமென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆணையிட்டுள்ளார்.  

பெல்ஜியத்தில் 15 மையங்களில் பணியாற்றிவரும் இந்த அருள்சகோதரர்கள், மனநலப் பாதிப்புள்ள நோயாளர்களுக்கு, கருணைக்கொலைக்கு ஆதரவு வழங்குவதை, இம்மாத இறுதிக்குள் நிறுத்த வேண்டுமென்று, திருத்தந்தையின் அனுமதியுடன், திருப்பீடம், கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

இம்மாதத் தொடக்கத்தில் அச்சகோதரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில், பெல்ஜியத்தில் இம்மையங்களில் பணியாற்றும் அருள்சகோதரர்கள் எல்லாரும் இணைந்து, கருணைக்கொலைக்கு ஆதரவு தெரிவிப்பதைக் கைவிடுவதாக உறுதியளிக்கும் கடிதம் ஒன்றை கையொப்பத்துடன், அச்சபையின் தலைவருக்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மனித வாழ்வு, கருவான நேரம் முதல், இயற்கையான மரணம் அடையும்வரை, மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டும் என்ற, வாழ்வு குறித்த திருஅவையின் அதிகாரப்பூர்வ போதனைகளுக்கு முழு ஆதரவு வழங்குவோம் என்று, அக்கடிதத்தில் குறிப்பிட வேண்டுமென்றும் திருப்பீடம் வலியுறுத்தியுள்ளது.

அனைவரும் இணைந்து எழுதும் இக்கடிதத்தில் கையொப்பமிட மறுப்பவர்கள், திருஅவை சட்டத்தின்படி, கடும் தண்டனைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் திருப்பீடம் எச்சரித்துள்ளது.

மேலும், பெல்ஜியத்தில் பணியாற்றிவரும் தனது சபை அருள்சகோதரர்களின் நிலைப்பாடு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அச்சபையின் தலைவர்  அருள்சகோதரர், René Stockman அவர்கள், வாழ்வு முழுமையானது என்பது, கிறிஸ்தவ அறநெறிக்கோட்பாட்டின் மையமும், அடித்தளமுமாகும் என்றும், வாழ்வு இறைவனின் கொடை, அது பாதுகாக்கப்பட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.   

பெல்ஜியத்தில் கருணைக்கொலை சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.