2017-08-11 15:46:00

தவக்காலச் சிந்தனை : காய்ந்து சாய்ந்த இலையின் பாடம்


ஞானம் தேடி ஓர் இளைஞர் துறவுமடம்  ஒன்றில் சேர்ந்தார். அங்கு ஞானம் அடைவதற்கு முதல் படியாக, ''உன்னையே நீ உணர்வாயாக'' என்றனர். அது அவருக்குப் பிடிபடவில்லை. அவருக்கு எப்படி போதிப்பது என்று அங்கிருந்தவர்களுக்கும் தெரியவில்லை. ஒருநாள் இளைஞரை அழைத்த தலைமைக்குரு, ‘இன்று நீ தனியாக வெளியில் சென்று நடந்துவிட்டு வா’ என்றார். ஊருக்குள் நடந்து சென்ற இளைஞர், வழியில் ஒரு மூதாட்டியைப் பார்த்தார். ஒரு மரத்தடியில் அமர்ந்து இருந்த மூதாட்டியின் காலருகே திடீரென, அந்த மரத்திலிருந்து ஒரு காய்ந்த மட்டை விழுந்தது.  பயந்து போன இளைஞர், அம்மூதாட்டியிடம் கேட்டார், ' இப்படி அச்சப்படாமல் அமர்ந்திருக்கிறீர்களே, எப்படி உங்களால் முடிகிறது?' என்று.  இவரை அண்ணாந்துப் பார்த்த அந்த மூதாட்டி சொன்னார், 'இன்று இல்லாவிட்டாலும் நாளையாவது நானும் இந்த இலையைப்போல விழுந்துவிடுவேன் என்பதைப் புரிந்து கொண்டுள்ளேன். பின் எதற்குப் பெருமை,கர்வம், பயம் எல்லாம்? காய்ந்த இலையைக் காற்று உதைத்து எல்லாத் திசைகளிலும் மாறி மாறி அடித்துச் செல்வதைக் காண்கிறேன். நாளை அது சாம்பலாகிவிடும். நானும் அந்த இலையைப் போன்றே அலைவேன். நான் என்பது எனக்கு இனி இங்கில்லை. இதை இந்த காய்ந்த இலையிலிருந்து கற்றுக்கொண்டேன்' என்று. துறவுமடத்தில் பெறமுடியாத ஞானத்தை அந்தத் தாயிடமிருந்து கற்றுக்கொண்டார் அந்த இளைஞர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.