சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

ஏமனில் காலரா நோய் ஒழிக்கப்பட, ஆயுத வர்த்தகம் நிறுத்தப்பட..

போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் தலைநகர் - EPA

12/08/2017 15:53

ஆக.12,2017. உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன் நாட்டில் காலரா நோய் கட்டுப்பாடின்றி பரவி வருவதாகவும், அந்நாட்டில் போரிடும் தரப்புகளுக்கு ஆயுதங்கள் விற்கப்படுவது நிறுத்தப்படவும் கேட்டுக்கொண்டுள்ளார், தென் அராபிய பகுதிகளுக்கான திருப்பீட பிரதிநிதி ஆயர் பால் ஹிண்டர் (Paul Hinder).

அபுதாபியில் அலுவலகத்தைக் கொண்டு பணியாற்றும் ஆயர் ஹிண்டர் அவர்கள், ஏமன் நாட்டின் நிலவரம் பற்றி, CNA கத்தோலிக்கச் செய்தியிடம் விளக்கியபோது, அந்நாட்டில் பரவி வரும் காலரா நோய் ஒழிக்கப்படவும், ஆயுத வர்த்தகம் நிறுத்தப்படவும் செபிக்குமாறு விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

செபத்தின் வல்லமையில் தான் நம்பிக்கை வைத்திருப்பதாகக் கூறியுள்ள ஆயர் ஹிண்டர் அவர்கள், ஏமன் நாட்டில் துன்புறும் அன்னை தெரேசா சபையினர் உட்பட கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள், என, அனைத்து மக்களையும் நினைத்து, உலக மக்கள் அனைவரும் செபிக்குமாறு கூறியுள்ளார்.            

ஏமன் நாட்டில் கத்தோலிக்க திருஅவை எவ்வித அமைப்புமின்றி மிகச் சிறுபான்மையாக உள்ளது என்றும், அந்நாட்டின் தற்போதைய நிலைமைக்குத் தங்களால் மிகச் சிறிதளவே ஆற்ற முடியும் என்றும் கூறினார், ஆயர் ஹிண்டர்.

ஏமனில் பரவி வரும் காலராவால், 3 இலட்சத்து 50 ஆயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர், 1,800க்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் மற்றும், இவ்வாண்டின் இறுதிக்குள், ஆறு இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் காலராவால் தாக்கப்படக்கூடும் எனவும் ஆயர் எச்சரித்தார்.

ஏமனில் 2015ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தொடங்கிய சண்டையில் முப்பது இலட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் புலம்பெயர்ந்துள்ளனர் மற்றும், இரண்டு கோடிக்கு  மேற்பட்ட மக்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவைப்படுகின்றன என செய்திகள் கூறுகின்றன.

 ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி

12/08/2017 15:53