2017-08-12 16:17:00

காமரூனில் நிலவிவரும் பதட்டநிலைகள் குறித்து ஆயர்கள் கவலை


ஆக.12,2017. காமரூன் நாட்டில், ஆங்கிலம் பேசும் சமூகத்திற்கும், பிரெஞ்சு பேசும் சமூகத்திற்கும் இடையே ஓராண்டுக்கு மேலாக நிலவிவரும் பதட்டநிலைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

ஆப்ரிக்க நாடாகிய காமரூனில், ஏறத்தாழ இருபது விழுக்காட்டினராக, வட மேற்கிலும், தென் மேற்கிலும் வாழும் ஆங்கிலம் பேசும் சமூகத்தினர், அந்நாட்டின் ஏனைய மக்களிடமிருந்து தனித்து வாழவேண்டுமென, 2016ம் ஆண்டு நவம்பர் முதல் வலியுறுத்தி வருகின்றனர் என ஆயர்கள் கூறியுள்ளனர்.

காமரூன் நாட்டில் பெரும்பாலான மக்கள் பிரெஞ்சு மொழி பேசும்வேளை, ஆங்கிலம் பேசுபவர்கள் தனிநாடு கேட்டு வருகின்றனர் என்றும், ஆங்கிலம் பேசும் மக்கள், சமூக மற்றும் அரசியல் வாழ்வில் ஓரங்கட்டப்படுவதாகவும், இதனாலே அவர்கள் தனிநாடு கேட்பதாகவும், காமரூன் ஆயர்கள் கூறியுள்ளனர்.

மேலும், காமரூன் நாட்டில், ஆங்கிலம் பேசும் மக்கள் பெருமளவில் வாழ்கின்ற Bamenda மாநிலத்தில், மத்திய அரசின் கல்வித்திட்டத்திற்கு எதிராக நடத்தப்பட்டுவரும் போராட்டங்கள் நிறுத்தப்பட்டு, சிறார் பள்ளிகளுக்குச் செல்ல வழியமைக்கப்படுமாறு, அம்மாநில ஆயர் பேரவையின் உதவித் தலைவர் ஆயர், George Nkuo அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.