2017-08-12 15:41:00

திருத்தந்தை : இளையோரே, நீங்கள் திருஅவையின் நம்பிக்கை


ஆக.12,2017. “அன்புள்ள இளையோரே, நீங்கள் திருஅவையின் நம்பிக்கை. உங்களது எதிர்காலம் பற்றி கனவு காண்கின்றீர்களா? அப்படியானால், உலக ஆயர்கள் மாமன்றத்தில் கலந்துகொள்ளுங்கள்”என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.  

ஆகஸ்ட் 12, இச்சனிக்கிழமையன்று, ஐக்கிய நாடுகள் நிறுவனம், உலக இளையோர் நாளைக் கடைப்பிடித்ததையொட்டி, தனது டுவிட்டரில் இவ்வாறு வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், "இளையோர், விசுவாசம், மற்றும் அழைப்பை தேர்ந்துதெளிதல்" என்ற தலைப்பில், இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டில் 15வது உலக ஆயர்கள் மாமன்றம் வத்திக்கானில் இடம்பெறவுள்ளது.

இம்மாமன்றத்திற்குத் தயாரிப்பாக, 16 வயது முதல், 29 வயது வரையுள்ள இளையோர் அனைவருக்கும் கேள்விகள் அனுப்பப்பட்டுள்ளன.

உலகளாவிய சமூகத்தை வளப்படுத்துவதற்கு உலகின் இளையோர் எடுக்கும் முயற்சிகளை அங்கீகரிக்கவும், உள்ளூர் சமூகங்களில் இளையோரின் ஈடுபாட்டை ஊக்குவிக்கவுமென, ஐக்கிய நாடுகள் நிறுவனம், ஆகஸ்ட் 12ம் தேதியை, உலக இளையோர் நாளாக அறிவித்து கடைப்பிடித்து வருகிறது.

1991ம் ஆண்டில், ஆஸ்ட்ரியாவின் வியன்னாவில், ஐ.நா. நடத்திய முதல் உலக இளையோர் கருத்தரங்கில் கலந்துகொண்ட, இளையோர் பிரதிநிதிகளின் பரிந்துரையின்பேரில், உலக இளையோர் நாளை உருவாக்கியது ஐ.நா. பொது அவை.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.