2017-08-12 15:28:00

பொதுக்காலம் 19ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


உலகப்புகழ் பெற்ற மனநல மருத்துவர், கார்ல் யுங் (Carl Jung) அவர்களின் அறைக்கு வெளியே, ஒரு கல்லில் பொறிக்கப்பட்டிருந்த சொற்கள் இவை: "Called or Not, God is Present" "அழைத்தாலும், அழைக்கவில்லையென்றாலும், எப்போதும் நம்முடன் இருப்பவர் இறைவன்". மறுக்கமுடியாத இந்த உண்மையை நம் உள்ளத்தில் இன்னும் ஆழமாய் பதிக்க, இன்றைய ஞாயிறு வழிபாடு நமக்கு வாய்ப்பளிக்கிறது. நம் வாழ்வில், எவ்வடிவில், எவ்வகையில், கடவுள் உடன் இருக்கிறார் என்ற உண்மையை, இன்றைய முதல் வாசகத்தில், இறைவாக்கினர் எலியா வழியாகவும், நற்செய்தியில் புனித பேதுரு வழியாகவும் கற்றுக்கொள்ள முயல்வோம்.

இன்றைய முதல் வாசகத்தில் நாம் சந்திக்கும் இறைவாக்கினர் எலியா, தன் உயிருக்குப் பயந்து, குகையில் ஒளிந்திருக்கிறார். பாகால் என்ற தெய்வத்திற்குப் பணி செய்த பொய்வாக்கினர்களை நூற்றுக் கணக்கில் பழி தீர்த்த இறைவாக்கினர் எலியா, (அரசர்கள் முதல் நூல் 18: 40) அரசி ஈசபேலின் கையால் இறப்பதற்கு அஞ்சி, நாட்டைவிட்டு ஓடிப்போகிறார். தான் வாழ்ந்தது போதும் என்று விரக்தியடைந்த இறைவாக்கினர் எலியாவை, தன் திருமலைக்கு அழைத்துச் செல்கிறார், இறைவன். அங்கே, தன்னைச் சந்திக்கும்படி, இறைவன், எலியாவுக்கு அழைப்பு விடுக்கிறார். இந்த அழைப்பைத் தொடர்ந்து வந்த சுழல்காற்று, நிலநடுக்கம், தீ ஆகியவற்றில் இறைவன் இல்லை. இவற்றிற்குப் பின் வந்த ‘அடக்கமான மெல்லிய ஒலி’யில் (1 அரசர்கள் 19: 12-13) இறைவனின் அழைப்பை எலியா கேட்கிறார்.

சக்தி வாய்ந்த அரசியை எதிர்த்து, தன்னைக் காக்கவரும் இறைவன், சக்தியின் வெளிப்பாடுகளான சுழல்காற்று, நிலநடுக்கம், தீ இவற்றின் வழியே வரவேண்டும் என்பது, எலியாவின் எதிர்பார்ப்பாக இருந்திருக்கலாம். இந்த எதிர்பார்ப்பிற்கு முற்றிலும் மாறாக, மெல்லிய ஒலியில் இறைவன் இறைவாக்கினரைச் சந்தித்தது, எலியாவுக்கு மட்டுமல்ல, நமக்கும் நல்ல பாடம். நாம் எதிர்பார்க்கும் வழிகளில் வராமல், எதிர்பாராத விதமாய் வந்து, நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துவதே இறைவனின் அழகு. இதையே இன்றைய நற்செய்தி நிகழ்ச்சியிலும் நாம் காண்கிறோம்.

இயேசு கடல்மீது நடந்தது, பேதுரு கடல்மீது நடக்க முயன்றது ஆகிய நிகழ்வுகள் இன்றைய நற்செய்தியாகத் தரப்பட்டுள்ளன. இயேசு 5000 பேருக்கு உணவளித்த பிறகு அன்று மாலை, அல்லது, இரவே, இந்தப் புதுமை நடந்ததாகச் சொல்லப்பட்டுள்ளது.

இன்றைய நற்செய்தியின் முதல் வரிகளே நமக்கு ஒரு பாடத்தைச் சொல்லித் தருகின்றன. இயேசு கூட்டத்தினரை அவ்விடத்திலிருந்து அனுப்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது சீடரையும் உடனே படகேறித் தமக்குமுன் அக்கரைக்குச் செல்லுமாறு அவர் கட்டாயப்படுத்தினார். (மத்தேயு நற்செய்தி 14: 22) பசியால் வாடியிருந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்த இயேசு, உடனே அவ்விடத்தை விட்டு அகல நினைத்தார். அது மட்டுமல்ல. தன் சீடர்களையும் அவ்விடத்தைவிட்டு செல்லும்படி கட்டாயப்படுத்தினார் என்று இன்றைய நற்செய்தி ஆரம்பமாகிறது. இயேசு ஏன் இவ்விதம் நடந்துகொண்டார் என்பதற்குரிய காரணத்தை யோவான் நற்செய்தி தெளிவுபடுத்துகிறது. யோவான் நற்செய்தியிலும் இயேசு, 5000 பேருக்கு உணவளித்த புதுமை சொல்லப்பட்டுள்ளது. அப்புதுமை முடிந்ததும், அங்கு நிகழ்ந்ததை, நற்செய்தியாளர் யோவான் இவ்விதம் கூறியுள்ளார்:

யோவான் நற்செய்தி: 6: 14-15

இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், 'உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக் கொண்டுபோய் அரசராக்கப் போகிறார்கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

வயிறார உண்டவர்கள் இயேசுவை வாயாரப் புகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் கூட்டத்தில் ஒருவர் திடீரென, "இவர்தாம் நாம் இத்தனை ஆண்டுகளாய் காத்து கிடந்த அரசர்" என்று உரக்கச் சொல்லியிருக்கலாம். அதுவரை இயேசுவின் சொல்திறமையைக் கண்டு வியந்தவர்கள், அன்று அவரது செயல் திறமையையும் கண்டனர். 5000 பேருக்கு உணவளித்த அந்தப் புதுமை, இயேசுவின் மீது இருந்த மதிப்பை, இன்னும் பல மடங்காக உயர்த்தியது. இயேசு அவர்களது எண்ணங்களை, அவ்வெண்ணங்களை செயல்படுத்த அவர்கள் கொண்ட வேகத்தைப் பார்த்தார். அவர்கள் மத்தியிலிருந்து நழுவிச் சென்றார்.

கூட்டத்தில் உருவாகும் நிதானமற்ற உணர்வுகள், ஒருவருக்குக் கோவில் கட்ட கற்களைத் திரட்டும். அல்லது, அதே கற்களை எறிந்து, அவரைக் கொன்று, சமாதியும் கட்டும். இதை நன்கு உணர்ந்திருந்த இயேசு, அங்கிருந்து அகன்று சென்றார். எதற்காக? தன் தந்தையுடன் உறவாட, உரையாட...

மின்னல் கீற்று போல சிந்தனை ஒன்று நமக்குள் பளிச்சிடுகிறது. வாழ்க, வாழ்க என்று கூட்டங்கள் எழுப்பும் ஆரவாரத் துதிகளிலேயே மயங்கிக்கிடக்கும் நமது தலைவர்கள், அவ்வப்போது, கூட்டத்திலிருந்து தப்பித்துப் போய், தங்கள் வாழ்க்கையை, தனியே கொஞ்சம் அமைதியாய் சிந்தித்தால், எவ்வளவு பயன் கிடைக்கும்!

தந்தையோடு தனியே உறவாடச்சென்ற இயேசு, அங்கேயேத் தங்கிவிடவில்லை. காற்றோடு, கடலோடு போராடிய தன் சீடர்களைத் தேடிவந்தார். அதுவும், கடல்மீது நடந்து வந்தார்.

கடல்மீது நடந்துவருவது இயேசுதான் என்பதை, சீடர்களால் உணர்ந்துகொள்ள முடியவில்லை. அவர்களது எண்ணங்கள், பார்வைகள் எல்லாம், அவர்களைச் சூழ்ந்தெழுந்த கடல் அலைகளிலும், சுழற்றியடித்த காற்றிலும் இருந்ததால், கடவுளை அவர்களால் பார்க்கமுடியவில்லை. நம்மைச்  சூழ்ந்து பயமுறுத்தும் துன்பங்களையும், போராட்டங்களையும் மட்டுமே பார்த்துவிட்டு, கடவுளைப் பார்க்கமுடியாமல் தவித்த நேரங்கள் எத்தனை, எத்தனை? கடவுள் நம்மை விட்டு தூரமாய் போய்விட்டதைப் போல் எத்தனை முறை உணர்ந்திருக்கிறோம்?

Jennifer Jill Schwirzer என்ற கவிஞர் எழுதிய ‘காலடித்தடங்கள்’ (Footsteps) என்ற கவிதையின் சுருக்கம் இது: மனிதன் ஒருவன், தன் வாழ்க்கைப் பயணத்தைத் திருப்பிப்பார்க்கிறான். பயணத்தில் கடவுள் தன்னோடு நடந்து வந்ததற்குச் சான்றாக, பாதையில் இரு ஜோடி காலடித் தடங்கள் பதிந்திருந்தன. அவனுக்கு மிக்க மகிழ்ச்சி. ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. அந்தப் பாதையில், ஒரு சில நேரங்களில், ஒரு ஜோடி காலடித் தடங்களே இருந்ததைப் பார்க்கிறான். நினைவுபடுத்தி பார்த்தபோது, அந்த நேரங்களெல்லாம் அவன் அதிக துன்பத்தோடு போராடிய நேரங்கள் என்று கண்டுபிடிக்கிறான். உடனே அம்மனிதன் கடவுளிடம், "துன்ப நேரத்தில் என்னைத் தனியே தவிக்க விட்டுவிட்டு போய்விட்டீர்களே. இது உங்களுக்கே நியாயமா?" என்று முறையிடுகிறான். "மகனே, பெரும் துன்பங்கள் வந்தபோது ஒரு ஜோடி காலடித் தடங்களே இருப்பதைப் பார்த்துவிட்டு அவசர முடிவேடுத்துவிட்டாய். அந்த நேரத்தில் உன்னைவிட்டு நான் எங்கும் போகவில்லை. உன்னைத் தூக்கிக்கொண்டு நடந்தேன்" என்றார் கடவுள்.

இயேசு கடல்மீது நடந்த நிகழ்வு, மத்தேயு, மாற்கு, யோவான் ஆகிய மூன்று நற்செய்திகளிலும் கூறப்பட்டுள்ளது. மத்தேயு மட்டும், இன்னுமொரு நிகழ்வை இங்கு இணைக்கிறார். அதுதான்... பேதுரு கடல் மீது நடந்த புதுமை. (மத்தேயு நற்செய்தி 14: 26-32)

புனித பேதுரு நீரின்மேல் நடந்ததையும், பின்னர் தடுமாறி, தண்ணீரில் மூழ்கியதையும் மையப்படுத்தி, நம் விசுவாச வாழ்வில் நிகழும் ஏற்றத்தாழ்வுகளைப்பற்றி இறையியல் பேராசிரியரான அருள்பணி Ron Rolheiser அவர்கள் அழகாக விளக்கமளித்துள்ளார். நம் விசுவாச வாழ்வில், சிகரங்களைத் தோட்ட நேரங்கள் உண்டு; பாதாளத்தில் புதைக்கப்பட்ட நேரங்களும் உண்டு. இந்த மாற்றத்தை, அருள்பணி Rolheiser அவர்கள் கூறும்போது, நம் விசுவாசம், சில நாள்கள், நம்மை, தண்ணீரின் மேல் நடக்க வைக்கிறது; வேறு சில நாள்கள், தண்ணீரில் போட்ட கல்லைப்போல, மூழ்கச் செய்துவிடுகிறது என்று கூறியுள்ளார். இந்த மாற்றத்திற்கு அவர் கூறும் ஒரு முக்கிய காரணம் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

எப்போதெல்லாம் நம் விசுவாசம் இறைவனை மையப்படுத்தியிருந்ததோ, அப்போதெல்லாம் நம்மால் தண்ணீர்மேல் நடக்க முடிந்தது. ஒரு சில வேளைகளில், நாம் ஆற்றும் செயல்கள் நம்மையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிடுவதால், நமது கவனம் இறைவனைவிட்டு விலகி, நமது சக்தி, நமது திறமை இவற்றின் மீது திரும்பி, நம்மால் இது முடியுமா என்று கணக்கிட வைக்கின்றன. அவ்வேளையில், நாம் தண்ணீரில் மூழ்கத் துவங்குகிறோம். இதுதான் பேதுருவுக்கு நிகழ்ந்தது.

“நானும் நீரில் இறங்கி நடக்கவா?” என்று, பேதுரு, ஒரு குழந்தைபோல பேசுகிறார். இயேசுவும் குழந்தையாக மாறி, “வா” என்று கூறி, ஒரு விளையாட்டை ஆரம்பிக்கிறார். தண்ணீரில் நடந்துவரச் சொல்லி அழைத்தது, ஒரு சவால். அதுவும், புயல், அலை என, பயமுறுத்தும் சூழலில், இயேசு, பேதுருவைத் தண்ணீரில் நடக்கச் சொன்னது, பெரியதொரு சவால்.

இதில் கவனிக்க வேண்டிய மற்றோர் அம்சம் என்னவென்றால், பேதுருவுக்கு அந்தச் சவாலான அழைப்பைத் தருவதற்கு முன்பு, இயேசு, காற்றையும், கடலையும் அமைதி படுத்தியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

வாழ்க்கையில் வீசும் புயல்கள் எல்லாம் ஓய்ந்த பிறகுதான், பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்த பிறகுதான், இறைவனைச் சந்திக்க முதல் அடி எடுத்துவைப்போம் என்று நினைக்கும் நம் எண்ணங்கள் தவறு; மாறாக, அந்தப் புயலின் நடுவில், இறைவன் காத்துக்கொண்டிருப்பார்; துணிந்து சென்று, அவரைச் சந்திக்கலாம் என்பதை, இயேசு நமக்கு சொல்லாமல் சொல்லித் தருகிறார்.

இயேசு பேதுருவிடம், "வா" என்றழைத்ததும், தான் அமர்ந்திருந்த படகு தந்த பாதுகாப்பை உதறிவிட்டு, நம்பிக்கையுடன் தண்ணீரில் தடம் பதித்தார். ஆனால், ஒரு சில நொடிகளில், தான் ஆற்றும் செயலின் அற்புதம் அவரைத் திக்குமுக்காட வைத்தது. போதாததற்கு, சூழ்ந்திருந்த புயலும் அவரது சந்தேகத்தை வளர்த்தது. எனவே, அவர் மூழ்கத் துவங்கினார்.

தண்ணீர் மீது நடப்பது, தண்ணீரில் மூழ்குவது என்ற இருவேறு நிலைகளை, மறைப்பணியாளர் ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தின் வழியே அருள்பணி Rolheiser அவர்கள் விளக்குகிறார்:

ஆங்கிலேயரான டொனால்ட் நிக்கோல் (Donald Nicholl) என்ற இறையியலாளர், ஆப்ரிக்காவில் பழங்குடியினரிடையே பணியாற்றி வந்த மறைபணியாளர் ஒருவரைப்பற்றி 'Holiness' அதாவது, 'புனிதம்' என்ற தன் நூலில் கூறியுள்ளார். இரு இனத்தவரிடையே உருவான ஒரு கருத்து வேறுபாட்டைத் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர் அழைக்கப்பட்டார். அந்த சமரசக் கூட்டத்தில் என்ன சொல்வது, என்ன செய்வது என்பவை எதுவும் தெரியாமல் அந்த மறைபணியாளர் திகைத்தார். இருந்தாலும், இறைவன் மீது பாரத்தைப் போட்டுவிட்டு கூட்டத்திற்குச் சென்றார். அக்கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி, அவ்விரு இனத்தவரையும் எளிதாக ஒருங்கிணைத்தார்.

இந்த அனுபவத்தால் துணிவு பெற்றவராய், அடுத்துவந்த பிற மோதல்களையும் தீர்ப்பதற்கு, அந்த மறைபணியாளர், தானாகவே முன்வந்தார். தன் அனுபவம், திறமை இவற்றைப் பயன்படுத்தி, சமரசம் செய்ய முயன்றார். ஆனால், அந்த கூட்டங்களில் அவரது முயற்சிகள் தோல்வியைத் தழுவின. மறைபணியாளரின் வெற்றி, தோல்வியைப் பற்றி நிக்கோல் அவர்கள் தரும் விளக்கம் இதுதான்:

"இனமோதல்கள் பற்றி சரியாக எதுவும் தெரியாதபோது, இறைவனை முற்றிலும் நம்பி, கூட்டங்களில் கலந்துகொண்ட மறைபணியாளர், சமரசங்களை உருவாக்கினார். அப்போதெல்லாம், இறைவனை நம்பி, அவர் நீரின்மேல் நடந்து சென்றார். பழங்குடியினரைப் பற்றி, அவர்களது மோதல்கள் பற்றி தனக்குத் தெரியும் என்ற எண்ணத்தில், தன் திறமைகளை, அறிவுத்திறனை நம்பி மறைபணியாளர் சமரசக் கூட்டங்களில் கலந்துகொண்டபோது, கல்லைப்போல் தண்ணீரில் மூழ்கினார்" என்று நிக்கோல் அவர்கள் எழுதியுள்ளார்.

இறைவன் இன்று நமக்கு விடுக்கும் அழைப்புக்கள் இவைதான்:

"பாதுகாப்பிற்காக உன்னையே பூட்டிவைத்துள்ள குகையைவிட்டு வெளியே வா. எதிர்பாராத வடிவங்களில் என்னைச் சந்திக்க வா."

"பாதுகாப்பான படகைவிட்டு இறங்கி, நீர் மீது நடந்துவா. சூழ்ந்திருக்கும் புயலை மறந்து, என்னை நோக்கியவண்ணம் நடந்து வா."

பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும். அலையும், புயலும் அலைகழித்துக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும், அஞ்சாது செல்வோம்.... புயலின் நடுவில், கடலின் நடுவில் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.