2017-08-12 16:22:00

மத்திய ஆப்ரிக்க குடியரசில் மொரோக்கோ படைகள் அகற்றப்பட..


ஆக.12,2017. மத்திய ஆப்ரிக்க குடியரசின் தென் கிழக்கே அமைந்துள்ள பங்காஸ்ஸு (Bangassou) நகரில், ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மொரோக்கோ நாட்டுப் படைகள் அகற்றப்படுமாறு, மக்கள் கேட்பதாக அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் உட்பட பல்சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பங்காஸ்ஸு கத்தோலிக்க ஆயர் Juan José Aguirre, அந்நாட்டின் சமயக்குழுக்கள் அவைத் தலைவர் Oumar Kobine Layama, உள்ளூர் அரசியல்வாதிகள், நகர நிர்வாகத்தினர், பொதுமக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கிய குழு ஒன்று, பங்காஸ்ஸு நிலவரத்தை நேரில் சென்று ஆய்வு செய்து வெளியிட்ட அறிக்கையில், அந்நகர் மக்களின் விண்ணப்பம் நியாயமானதே எனத் தெரிவித்துள்ளது.

பங்காஸ்ஸு நகரத்தில் ஐ.நா. அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மொரோக்கோ நாட்டுப் படைகள் (MINUSCA), தாறுமாறாக துப்பாக்கிச்சூடு நடத்துவதாகவும், இதில் அப்பாவி பொது மக்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், ஆயர் Aguirre அவர்கள், பீதேஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

பங்காஸ்ஸு மற்றும், அந்நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில், முன்னாள் Seleka புரட்சியாளர்களுக்கும் Balaka புரட்சியாளர்களுக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இந்நகரின் கத்தோலிக்கப் பேராலயத்தில் அடைக்கலம் தேடியுள்ள ஏறத்தாழ இரண்டாயிரம் முஸ்லிம்கள், Balaka புரட்சியாளர்களால் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர் எனக் கூறப்படுகிறது.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.