2017-08-12 15:23:00

மியான்மாரின் திருப்பீடத் தூதராக பேராயர் Paul Tschang In‑Nam


ஆக.12,2017. மியான்மார் நாட்டின் திருப்பீடத் தூதராக, பேராயர் Paul Tschang In‑Nam அவர்களை, இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

பேராயர் Paul Tschang In‑Nam அவர்கள், தாய்லாந்து, கம்போடியா மற்றும் லாவோஸ் நாடுகளுக்கு திருப்பீடத் தூதராகப் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்.

மியான்மார் அரசின் முதன்மை ஆலோசகரும், அந்நாட்டின் ஆளுங்கட்சியான தேசிய குடியரசு கட்சியின் தலைவருமான ஆங் சான் சூ சி (Aung San Suu Kyi) அவர்கள், கடந்த மே நான்காம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்தவேளை, திருப்பீடத்திற்கும், மியான்மார் அரசுக்கும் இடையே தூதரக உறவுகளைத் துவங்கும் விருப்பத்துடன், இவ்விரு நாடுகளும், அதே நாளன்று, ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன.

மியான்மாரில் ஏழு இலட்சத்துக்கு மேற்பட்ட கத்தோலிக்கர் உள்ளனர். இவர்களுக்கு, 16 ஆயர்களும், 700க்கும் மேற்பட்ட அருள்பணியாளர்களும், 2,200 அருள்சகோதரிகளும் பணியாற்றுகின்றனர்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.