சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ நீதிப் பணி

அமெரிக்க இனவெறித் தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்

Charlottesvilleயில் இறந்தோர்க்கு அஞ்சலி செலுத்தும் குழந்தை - AFP

14/08/2017 16:12

ஆக.,14,2017. அமெரிக்க ஐக்கிய நாட்டின் Charlottesville என்ற இடத்தில் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் ஒருவர் உயிரிழந்து, ஏறத்தாழ 35 பேர் காயமடைந்தது குறித்து தங்கள் ஆழ்ந்த கவலையையும் கண்டனத்தையும் வெளிட்டுள்ளனர் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர்கள்.

வெள்ளை இனத்தவரே உயர்ந்தவர்கள் என்ற  கருத்தை வலியுறுத்திய வண்ணம் கடந்த வெள்ளி மாலை Charlottesville நகரில் நடத்தப்பட்ட பேரணியைத் தொடர்ந்து, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்னொரு பிரிவினர் சனிக்கிழமையன்று நடத்திய ஊர்வலத்தின் மீது வெள்ளை இன ஆதிக்கத்தை வலியுறுத்தும் ஓர் இளைஞரால், வாகனம் ஒன்றின்  உதவியுடன் நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து கண்டனத்தை வெளியிட்டுள்ள ஆயர்கள், நல்மனதுடையோர் அனைவரும் ஒன்றிணைந்து செபிப்பதுடன், ஒன்றிப்பின் அவசியத்தை வலியுறுத்தவேண்டும் என கேட்டுள்ளனர்.

சனிக்கிழமை காலையில் இடம்பெற்ற இத்தாக்குதல் குறித்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர், கர்தினால் Daniel  DiNardo அவர்கள், இனவெறி, வெள்ளையின ஆதிக்கம், மீண்டும் எழும் நாத்சிய கொள்கை பரப்பு போன்றவற்றை திருஅவை எப்போதும் எதிர்ப்பதாக தெரிவித்தார்.

இனவெறி தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவருக்காகவும் திருஅவை செபிப்பதாகவும் தெரிவித்துள்ளார் கர்தினால்  DiNardo.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி

14/08/2017 16:12