2017-08-14 16:44:00

இயேசுவிலான விசுவாசம் நம்மை கைவிடாது, தூக்கிவிடும்


ஆக.,14,2017. நம் வாழ்வில் புயல் வீசும் நேரங்களில் நம் விசுவாசம் நமக்கு துணை நிற்பதுடன், துன்ப வேளைகளில் நம்மைக் கைதூக்கிவிட்டு, இருளிலும் நமக்கு வழிகாட்டும் கரமாக உள்ளது என, இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இஞ்ஞாயிறு வாசகம் எடுத்துரைத்த, இயேசு கடல் மீது நடந்த நிகழ்வை மையமாக வைத்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மக்களையும் திருஅவையையும் ஒரு படகு என்று உரைத்து, எத்தனை துன்பங்கள், துயரங்கள் வந்தாலும், நம் பாதுகாப்பு பறிக்கப்படாது என்றார்.

நீர் மீது இயேசு நடந்தது, புயலை அடக்கியது, தூய பேதுரு கடல் மீது நடக்க அனுமதி வழங்கியது, மற்றும், தண்ணீரில் மூழ்குவதிலிருந்து பேதுருவைக் காப்பாற்றியது போன்றவற்றைச் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, இயேசுவின் மீது நாம் கொண்டுள்ள விசுவாசம், வாழ்வை எளிதாக மாற்றிவிடாது, மாறாக, எத்தகைய துன்பத்திலிருந்தும் நாம் காப்பாற்றப்படுவோம் என்ற உறுதியை வழங்குகிறது என்றார்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.