2017-08-14 16:18:00

வாரம் ஓர் அலசல் – மகத்தான செயல்களைச் செய்யவே..


ஆக.14,2017. தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்து, அந்நியர் ஆதிக்கத்திலிருந்து நம் நாடுகளுக்கு விடுதலை வாங்கிக்கொடுத்த நம் விடுதலை போராட்ட தியாகிகளை, நாடுகளின் சுதந்திர தினத் திருநாளில் சிறப்பாக நினைவுகூர்ந்து பெருமைப்படுகின்றோம். அவர்கள் காட்டிய உயரிய வழிகளில் நடப்போம் என உறுதி எடுக்கிறோம். அதேநேரம், இன்றும், கடும்குளிரிலும், கடுமையான பாதுகாப்புப்பணிகளில் ஈடுபட்டுள்ள வீரர்களையும், அப்பணிகளின்போது வீரமரணம் அடையும் வீரர்களையும் நன்றியோடு நினைத்து வாழ்த்துகின்றோம், அஞ்சலி செலுத்துகின்றோம். நாட்டைத் தலைநிமிரச் செய்யும் அத்தனை துறைகளின் உழைப்பாளர்களையும் நினைத்து பூரிப்படைகின்றோம். இந்திய திருநாடு, ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று தனது எழுபது வருட சுதந்திர வாழ்வைக் கொண்டாடும்வேளையில், இந்திய அளவில் உடல் உறுப்பு தானத்தில், தமிழகம் தொடர்ந்து, இரண்டாவது முறையாக முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது என, ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்கள், உடல் உறுப்பு தானம் செய்த குடும்ப உறுப்பினர்களையும், மருத்துவர்களையும் கௌரவித்து, பாராட்டு தெரிவித்துள்ளார். இவ்வேளையில், சமூகத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழ்ந்துவரும் நல்ல மனிதர்களை இந்த நல்ல நாளில், நினைத்துப் பார்த்து, நல்லார் வழியில் செல்வதற்கு நாமும் முயற்சிப்போம்.

இக்காலத்தில், அரசியல் வாழ்வில் நேர்மையான ஒருவரைப் பார்ப்பது மிகவும் கடினம்தான். இந்தியாவில், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்களைக்கூட விட்டுவிடுவோம். ஒரு வார்டு கவுன்சிலர், ஒருமுறை பதவியில் இருந்தால்போதும். அவர் எத்தனை இலட்சங்கள் சம்பாதிப்பார் என்பதையே நம்மால் கணக்கிட முடியாது. ஆனால், இந்தியாவின் வடகிழக்கிலுள்ள திரிபுரா மாநில முதலமைச்சராக, பணியாற்றிவரும், மாணிக் சர்க்கார் (Manik Sarkar) அவர்களின் மொத்த சொத்தின் மதிப்பு வெறும் 10,800 ரூபாய்தானாம். கடந்த பதினைந்து ஆண்டுகளாக, முதலமைச்சராக தொடர்ந்து பணியாற்றிவரும் மாணிக் சர்க்கார் அவர்களுக்கு, சொந்தமாக வீடோ, வாகனமோ, கைபேசியோ கிடையாது என்றால் நம்ப முடிகின்றதா? இவர், 2008ம் ஆண்டில் முதலமைச்சராகப் பணியைத் தொடங்கினார். மூன்றுமுறை முதல்வராய் இருந்த அவர், 2013ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில், கடந்த தேர்தல்களைக் காட்டிலும் கூடுதல் இடங்கள் பெற்றும், அவரது தொகுதியில் கூடுதல் வாக்குகள் பெற்றும் முதல்வர் பதவியைத் தக்க வைத்திருக்கிறார். இவரது மனைவி பாஞ்சாலி அவர்களும், அரசு ஊழியராய் இருந்து ஓய்வுபெற்றவர். அவரது மொத்த சேமிப்பு ரூ 46,000-தானாம். இந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. சொந்த வேலையாக வெளியே சென்றால், ஆட்டோவில்தான் பயணம் செய்வார்களாம். மாணிக் சர்க்கார் அவர்களின் அரசு காரில், சுழலும் சிவப்பு விளக்கு கிடையாது.

1949ம் ஆண்டில் பிறந்த மாணிக் சர்க்கார் அவர்கள், தனது முதலமைச்சர் ஊதியம் முழுவதையும் கட்சிக்காகக் கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கும் ஐந்தாயிரம் ரூபாயில் குடும்பத்தை நடத்துகிறார். இந்தப் பணமும், தனது மனைவியின் ஓய்வூதியமும் அவர்களின் எளிய வாழ்க்கைக்குப் போதுமானது என்கிறார் இவர். மாணிக் சர்க்கார், உடுத்தும் உடைகளை அவரே துவைத்து போட்டுவிடுவாராம். ‘எனது வெட்டிச் செலவு என்று பார்த்தால் தினசரி ஒரு சிறிய மூக்குப் பொடி மட்டை, ஒரு சிகரெட்தான்’ என்று முன்பு ஒருமுறை வெள்ளந்தியாய் கூறிய சர்க்கார் அவர்கள், தற்போது அந்தப் பழக்கங்களையும் விட்டுவிட்டாராம். 2009ம் ஆண்டில் மாணிக் சர்க்கார் அவர்களின் அம்மா மறைந்தபோது, பூர்வீக வீடு ஒன்று அவருக்கு வந்து சேர்ந்தது. வாரிசு இல்லாத தனக்கு அந்த வீடு தேவையில்லை என்று கூறி, தனது தங்கைக்கு அந்த வீட்டைக் கொடுத்து விட்டார். மாணிக் சர்க்காரின் அப்பா ஒரு சாதாரண டெய்லர். ஆனாலும் அறுபதுகளின் இறுதியிலேயே மாணிக் சர்க்கார் அவர்களை மேற்குவங்காள பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு படிக்க வைத்தார் அவர். சர்க்காரின் குடும்பத்தினர், உறவினர்கள் எல்லாருமே சராசரி நடுத்தர வர்க்கத்துக்கும் கொஞ்சம் கீழே உள்ள குடும்பங்கள்தான். இந்த உத்தம மனிதர் போன்று எல்லா அரசியல் தலைவர்களும் இருந்துவிட்டால், சமுதாயங்கள் எப்படி இருக்கும்!

மேலும், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த கரிய முண்டா (Kariya Munda) அவர்கள், 1977ம் ஆண்டு முதல், தற்போதைய ஜார்க்கன்ட் மாநிலத்திலுள்ள குந்தி (Khunti) தொகுதியிலிருந்து ஏழு முறை பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். இவரின் சொத்து மதிப்பு 75 இலட்சம் ரூபாய்தான். 1977ம் ஆண்டில் மொரார்ஜி தேசாயின் மத்திய அரசில் அமைச்சராகவும், இருந்தார். மக்களவை துணை சபாநாயகர் பதவியையும் இவர் வகித்திருக்கிறார். 77 வயதான கரிய முண்டா அவர்கள், இப்போதும் குந்தி தொகுதி எம்.பி-தான். கரிய முண்டா அவர்களின் தொகுதியில் நக்சலைட்டுகள் தொல்லையும் அதிகம். இருப்பினும், இவர் தன் வீட்டுக்குப் பாதுகாப்பு வேண்டும் என்று ஒருநாளும் கேட்டதில்லை. அனிகாரா (Anigara) என்ற கிராமத்தில் சாதாரண ஓட்டு வீட்டில்தான் இவர் வாழ்ந்து வருகிறார். வீட்டைச் சுற்றி உள்ள நிலத்தில், காய்கறிகளை அவரே பயிரிடுகிறார். எஞ்சியதை விற்பனைக்கு அனுப்புவார். இவரின் மகள் சந்திரவதி அவர்கள், ஓர் ஆசிரியர். இவர் ஒருமுறை செய்தியாளர்களிடம், சமுதாயத்தின் அடித்தட்டு மக்களை எப்போதும் மறந்துவிடக் கூடாது என, எனது தந்தை கூறுவார். எனவே ஆசிரியர் பணி முடிந்ததும், தெருவில் மாம்பழம் விற்கிறேன். விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையிலும், மாம்பழ விற்பனையில் கிடைக்கும் வருவாயில் ஏழைக் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தைச் செலுத்துவதற்காகவும் இந்த விற்பனை செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டத்தின் உத்தங்குடியில் உள்ள ஓர் உணவகத்தில் சாப்பிட வருகின்றவர்களை கைகூப்பி வரவேற்று உள்ளே அனுப்பிக் கொண்டிருப்பவர் தேவமைந்தன். நேர்மைக்கு மாறாக, அதிகாரத்திற்கு வளைந்து கொடுக்க மனது இடம் கொடுக்காததால், அரசு வேலையை இழந்தவர் இவர். அதுபற்றி கவலையில்லாமல் கிடைக்கும் வேலையைப் பார்க்க மதுரை வந்தார், உணவகத்தில் உணவு பரிமாறும் வேலை கிடைத்தது. மக்களைத் திருப்திப்படுத்தும், மற்றும், மகிழ்வாக வைத்திருக்கும் வேலை என்று மகிழ்ச்சியுடன் அதை ஏற்றுக்கொண்டார். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகளாக, கொஞ்சமும் சோர்வடையாமல் இந்த வேலையைத் தொடரும் இவர், தற்போது மேற்பார்வையாளராக இருக்கிறார். அறுபத்தைந்து வயதிலும், பதினைந்து கிலோமீட்டர் துாரம் சைக்கிள் ஒட்டுகிறார். எந்த நோயும் இல்லாமல் இருக்கிறார். இதில் வரும் வருமானத்தை வைத்தே பிள்ளைகளைப் படிக்கவைத்து, நல்லபடியாக திருமணம் செய்து கொடுத்துவிட்டார். உழைத்தது போதும் என்று பிள்ளைகள் சொன்னாலும், 'உழைத்துச் சாப்பிடும் சுகமே தனி' என்று சொல்லி அவர்களது வேண்டுகோளை நிராகரித்துவிட்டு ஓய்வுக்கு ஓய்வு கொடுத்திருக்கிறார் தேவமைந்தன்.

 

கோபால் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய வாசிப்பார். அவ்வப்போது கவிதையும் எழுதுவார். இதன் காரணமாக, கோபால் என்பவர், கவிஞர் தேவமைந்தனாகிவிட்டார். வீட்டில் இருந்து வேலைக்கு சைக்கிளில் வரும்போது மூடாத பள்ளம், எரியாத தெருவிளக்கு, அள்ளாத குப்பை என்று, கண்ணில்படும் அவலங்களை எல்லாம் குறித்து வைத்துக்கொண்டு அதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு ஒரு கடிதம் போட்டுவிடுவார், ஏழை எளிய மக்களுக்கு பயன்படக்கூடிய விடயங்கள் என்றால் அது பற்றி பத்திரிகைகளுக்கு எழுதி அனுப்பிவிடுவார். இப்படி ஒரு நாளைக்கு நான்கு கடிதமாவது எழுதி விடுவார். இதன் பயனாக, பல விடயங்கள் நிவர்த்தி செய்யப்படும். சில விடயங்கள் நடக்காது ஆனால் அதைப்பற்றி கவலைப்படாமல் இவர் எழுதிக்கொண்டே இருக்கிறார். இப்படி இதுவரை இவர் எழுதிய கடிதங்கள் பல ஆயிரம் இருக்கும். தேவமைந்தன் சொல்கிறார்.. என் ஊதியத்திற்குப் பணம் செலவிட முடியாது, தெருவில் இறங்கி போராட முடியாது. ஆனால் சமூகத்தில் காணப்படும் குறைகளை, அதிகாரிகள் மற்றும் அரசின் கவனத்திற்கு கொண்டு வரமுடியும் அதைத்தான் செய்கிறேன், நான் நியாயமாக எதையும் எடுத்துச் சொன்னால் கேட்கும் அதிகாரிகளும் இருக்கின்றனர். எடுத்துக்காட்டாக,  ஒரு முறை அளவிற்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச்சென்ற ஷேர் ஆட்டோவை ஒரங்கட்டி நிறுத்தி வைத்திருந்தார் ஒரு போக்குவரத்து ஆய்வாளர். அப்போது இவர் நேராக சென்று, 'ஷேர் ஆட்டோக்காரர் செய்த தவறுக்கு பாவம் பொது மக்கள் என்ன செய்வார்கள்? நேரத்திற்குப் போனால் மட்டுமே வேலை கிடைக்கும், கூலி ஆள்கள் உள்ளே இருக்கின்றனர், அவர்கள் வாழ்க்கையை ஏன் சிரமப்படுத்தவேண்டும்' என்று சொன்னவுடன் லைசென்ஸை மட்டும் வாங்கிக்கொண்டு ஷேர் ஆட்டோவை ரீலீஸ் செய்துள்ளார் அந்த அதிகாரி. இப்படி தேவமைந்தன் அவர்கள், மனதிற்கு சரி என்று படுவதை சொல்லாமலும் இவர் விடுவதில்லை. ஒரு நாளைக்கு ஒரு நல்ல காரியம், அதுவும் பொதுக்காரியம் செய்யாவிட்டால், எனக்கு அன்றைய நாள், நாளாகவே இருக்காது. இலட்சாதிபதிதான் புதைக்கப்படுவான், இலட்சியவாதி விதைக்கப்படுவான், இருப்பதைக் கொண்டு சிறப்புடன் நிம்மதியுடன் தானும் வாழ்ந்து மற்றவர்களுக்காகவும் வாழும் இலட்சியவாதி நான். மக்களுக்காக நான் எழுதும் கடிதங்களை மதித்து நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகளுக்கும் பத்திரிகை ஆசிரியர்களுக்கும் நன்றியும் கடமையும் பட்டுள்ளேன் என்று சொல்லியுள்ளார்  தேவமைந்தன் (நன்றி தினமலர்). சுவாமி விவேகானந்தர் சொன்னார், மகத்தான செயல்களைச் செய்யவே கடவுள் உன்னை படைத்திருக்கிறார். நன்மையின் பக்கம் மனதை திருப்பினால், தீய எண்ணங்கள் உனக்குள் நுழைய முடியாது என்று.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.