2017-08-15 16:23:00

கென்ய மக்கள் அமைதியின் பாதையில் நடைபோட அழைப்பு


ஆக.,15,2017. கென்யாவில், தேர்தல் காலத்தில் உருவான பிரிவினைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களிடையே குணமளிப்பவர்களாக, அரசுத்தலைவரும், அரசும் செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், அந்நாட்டு ஆயர்கள்.

அண்மை அரசுத்தலைவர் தேர்தலின்போது, ஒருவர் எந்த கட்சிக்கு ஆதரவளித்தார் என நோக்கப்படாமல், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் அரசாக இந்த அரசு செயல்படவேண்டும் என விண்ணப்பித்துள்ள ஆயர்கள், அனைத்து அரசியல்வாதிகளும் தங்கள் வார்த்தைகளில் கவனம் செலுத்தி, ஒன்றிப்பு, அமைதி மற்றும் ஒப்புரவிற்காக உழைப்பவர்களாகச் செயல்படவேண்டும் என தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருப்போர், எச்சூழலிலும், மக்களின் மாண்புக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தும் கென்ய ஆயர்கள், தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக குறைகூறும் எதிர்க்கட்சியினர், சட்ட ரீதியாக மட்டுமே அதற்கு தீர்வு காண முயலவேண்டும் எனவும் கேட்டுள்ளனர்.

கென்ய மக்கள், அமைதி மற்றும் சகிப்புத்தன்மையின் பாதையில் எப்போதும் நடைபோடவேண்டும் எனவும் கென்ய ஆயர்கள், தங்கள் அறிக்கையில் விண்ணப்பித்துள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.