சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

வார ஒலிபரப்பு \ இரக்கத்தின் தூதர்கள்

சாம்பலில் பூத்த சரித்திரம் : தொடக்ககாலக் கிறிஸ்தவம்-பாகம் 6

உரோமைப் பேரரசு - RV

16/08/2017 14:53

ஆக.16,2017. உரோமைப் பேரரசு முழுவதையும், கி.பி. 392ம் ஆண்டு மே 15ம் தேதி முதல், கி.பி. 395ம் ஆண்டு சனவரி 17ம் தேதி வரை ஆட்சி செய்தவர், பேரரசர் தியோதோசியுஸ். இவர் முதலாம் தியோடோசியுஸ், மகா தியோதோசியுஸ் (Theodosius I, Theodosius the Great), எனவும் அழைக்கப்படுகிறார். உரோமைப் பேரரசின் கிழக்கையும், மேற்கையும் ஆட்சி செய்த கடைசிப் பேரரசரும் இவரே. இவருக்குப் பின், உரோமைப் பேரரசு, ஒன்றிணைக்கப்படவேயில்லை என வரலாற்று குறிப்புகள் கூறுகின்றன. கிறிஸ்தவத்தை அரசு மதமாக்கியவர் தியோதோசியுஸ். இவரது இறப்புக்குப் பின், உரோமைப் பேரரசு பிரிக்கப்பட்டு, கிழக்குப் பகுதியை, இவரின் இரு மகன்களில் ஒருவரான அர்காதியுசும், (Arcadius), மேற்குப் பகுதியை, மற்றொரு மகனான ஒனோரியுசும் (Honorius) ஆட்சி செய்தனர். கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகர் கான்ஸ்டான்டிநோபிள் நகரமாகவும், மேற்கு உரோமைப் பேரரசின் தலைநகர் உரோம் நகரமாகவும் இருந்தன. இவ்விரண்டு பேரரசுகளின் ஆட்சியமைப்பும் தெளிவாக நிர்ணயிக்கப்பட்டன. கிழக்குக்கும், மேற்குக்கும், இரு பேரரசு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. இவை, இரு இராணுவ முகாம்கள் போன்று இயங்கின. இதனால் ஆபத்துகளும் அவ்வப்போது ஏற்பட்டன. இவ்விரண்டு நீதிமன்றங்களும் நெருங்கி வரும்போதெல்லாம், ஏறத்தாழ அவை போர்களிலே முடிந்தன.  

இரு தலைநகரங்களான, உரோமையும், கான்ஸ்டான்டிநோபிளும் அரசியலுக்கும், மதத்திற்கும் எப்போதும் முன்னுரிமை கொடுத்தன. இதனால் நிலைமை சற்று, குழப்பமாகவே இருந்தது. நான்காம் நூற்றாண்டின் மத்திய காலத்தில், பேரரசர் 2ம் கான்ஸ்டான்டியுஸ் ஆட்சியில், உரோம் செனட் அவைக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரமே, கான்ஸ்டான்டிநோபிள் செனட் அவைக்கும் அளிக்கப்பட்டது. இதற்கு, சில ஆண்டுகள் சென்று, கி.பி.381ம் ஆண்டில், கான்ஸ்டான்டிநோபிள்  பொதுச் சங்கத்தில், உரோம் ஆயருக்கு இருந்த அதே அதிகாரம், கான்ஸ்டான்டிநோபிள் ஆயருக்கும் உண்டு என அறிவிக்கப்பட்டது. இந்நிலைமை, பல நூற்றாண்டுகளாக, சமயச் சூழல்களில் கசப்புணர்வுகளைக் கொண்டிருந்தது. இறுதியில், மத்திய காலங்களில், உரோம் கத்தோலிக்கத் திருஅவையும், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளும் தனித்தனியானவை என்பதை ஏற்று, உரோம் திருஅவையும், கான்ஸ்டான்டிநோபிள் திருஅவையும் பிரிந்தன. இராணுவத்தைப் பொருத்தவரை, உரோமைக்கும், கான்ஸ்டான்டிநோபிளுக்கும் இடையே, பேரரசர்களின் கட்டுப்பாட்டையும் மீறி, பெருமளவில் இடைவெளி ஏற்பட்டன.     

உரோமைப் பேரரசர் தெயோதோசியுஸ், கி.பி.395ம் ஆண்டுவரை, தனது சிறப்பான திறமையால், பேரரசு முழுவதையும் ஆட்சி செய்து வந்தார். அவருக்குப்பின் ஆட்சிக்குவந்தவர்கள், கி.பி.455ம் ஆண்டுவரை, பேரரசின் கிழக்கையும், மேற்கையும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். பேரரசின் மேற்குப் பகுதியில் அமைதிக்கென எடுக்கப்பட்ட எந்த ஒரு நடவடிக்கையும், ஜெர்மானியப் பழங்குடி இனத்தவரோடு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டே எடுக்க வேண்டிய நிலை உருவாகியிருந்தது. ஜெர்மன் கூலிப்படை வீரர்கள், உரோமை இராணுவத்தில் முக்கியமான அங்கம் வகிக்கத் தொடங்கினர். உரோமை இராணுவமும், பேரரசர்களை நியமிப்பதிலும், அவர்களை வீழ்த்துவதிலும் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. மேலும்,

ஜெர்மன் கூலிப்படை வீரர்கள் இத்தாலியில் குடியிருக்க விரும்பினர். இத்தாலியிலுள்ள பண்ணையாளர்களின் எஸ்டேட்டில் மூன்று பங்கு கேட்டனர். இது, உரோமையர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. கடந்த காலத்தில் உரோமைப் படை வீரர்களுக்குக் கொடுக்கப்பட்டு வந்த இந்தச் சலுகை, அவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்பட வேண்டும் எனச் சொல்லி, ஜெர்மன் வீரர்களின் நிபந்தனை புறக்கணிக்கப்பட்டது. எனவே கிளர்ச்சி தொடங்கியது.

ஜெர்மன் கூலிப்படை வீரர்கள், தங்கள் இனத்தில், Odoacer என்பவரை அரசராக நியமித்தனர். இவர், மேற்கு உரோமைப் பேரரசை அழிக்க விரும்பவில்லை. ஆனால், அதன் ஒரு பகுதியாக, இத்தாலியில், தன் இனத்தவரின் அரசராக ஆட்சி செய்ய, கான்ஸ்டான்டிநோபிள் பேரரசர் Zenoவிடம் அனுமதி கேட்டு தூது அனுப்பினார். ஆனால் அது மறுக்கப்பட்டது. அதேநேரம் உரோம் செனட் அதற்கு அனுமதியளித்தது. உரோமன் மரபு அமைப்பின்படி ஆட்சி செய்வதாக உறுதியளித்தார் Odoacer. கி.பி. 476ம் ஆண்டில், Odoacer இத்தாலியின் அரசராக ஏற்றுக்கொள்ளப்பட்டார். இது, உரோமைப் பேரரசின் முடிவாக நோக்கப்பட்டது. அரசர்களும், திருத்தந்தையரும் உரோமைப் பேரரசின் மரபுப்படி செயல்படாமல், இத்தாலியத் தீபகற்பத்தின் அதிகாரத்தைக் கொண்டிருந்தனர். ஆயினும், கான்ஸ்டான்டிநோபிளிலிருந்த உரோமைப் பேரரசர்கள், இத்தாலியில் தங்களின் அதிகாரத்தை நிலைநாட்டுவதில் குறியாயிருந்து, கி.பி.488ம் ஆண்டில், Ostrogoth இனத்தவரின் உதவியுடன் அதைச் செய்தனர். இதற்குப்பின், உரோமைப் பேரரசு என்னவானது?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

16/08/2017 14:53