2017-08-16 17:01:00

ஆகஸ்ட் 19, உலக மனிதாபிமான நாள்


ஆக.16,2017. உலகெங்கும் மனிதாபிமானம் நிறைந்த பணிகளில் ஈடுபட்டிருப்போருக்கு மரியாதை செலுத்தும்வண்ணம், ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 19ம் தேதி, உலக மனிதாபிமான நாளை, ஐ.நா.அவை கடைப்பிடிக்கின்றது.

ஆயுதப் பயன்பாட்டிற்கென பயன்படுத்தப்படும் இலக்குகளாக மக்களையும் அவர்களுக்கு பணியாற்றும் மருத்துவமனைகள் மற்றும் ஏனைய பணியிடங்களையும் மாற்றிவிடக் கூடாது என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம், 'ஓர் இலக்கல்ல' என்ற விருதுவாக்கு, ஆகஸ்ட் 19, இச்சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்படும் உலக மனிதாபிமான நாளின் மையக்கருத்தாக இவ்வாண்டு தெரிவு செய்யப்பட்டுள்ளது.

உலகின் பல நாடுகளில் மோதல்கள் அதிகரித்து வருவதையும், மோதல்கள் நிறைந்த இடங்களில் பணியாற்றுவோர் தாக்குதல்களுக்கு உள்ளாவதையும் குறித்து, ஐ.நா. பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் கவலை வெளியிட்டுள்ளார்.

போர்களைத் துவக்குவதற்கு எவ்வகையிலும் காரணமாகாத பல கோடி அப்பாவி மக்கள், அந்தப் போர்களால் மிக அதிக அளவில் இழப்புக்களைச் சந்திப்பது, பெரும் அநீதி என்று, உலக மனிதாபிமான நாளையொட்டி, ஐ.நா.அவை வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : UN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.