2017-08-16 15:26:00

கோரக்பூர் மருத்துவமனையில் இறந்த மாசற்ற குழந்தைகளுக்காக..


ஆக.16,2017. கோரக்பூர் மருத்துவமனையில் இறந்த மாசற்ற குழந்தைகளின் இழப்பிற்காக இந்தியத் திருஅவை ஆழ்ந்த வருத்தம் கொள்கிறது என்று, இந்திய ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் பசிலியோஸ் கிளீமிஸ் அவர்கள் கூறியுள்ளார்.

மாசற்ற குழந்தைகளின் மரணம் குறித்து இந்தியத் திருஅவை சார்பில் இரங்கலை வெளியிட்ட கர்தினால் கிளீமிஸ் அவர்கள், இந்த மரணங்கள், இந்தியாவில் செயல்பட்டுவரும் மருத்துவத் துறையின், அவலத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு என்று குறிப்பிட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கோரக்பூர் மருத்துவமனையில், ஆகஸ்ட் 7ம் தேதி முதல் உயிர் துறந்த குழந்தைகளின் எண்ணிக்கை தற்போது 79 ஆக உயர்ந்துள்ளது என்று ஆசியச் செய்தி கூறுகிறது.

குழந்தைகளின் சுவாசத்திற்கென பயன்படுத்தப்படும் ஆக்சிஜன் கொள்கலன்கள் காலியானதால், இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளன என்று ஊடகங்கள் கூறியுள்ளன.

ஆக்சிஜன் கொள்கலன்களை மருத்துவமனைக்கு வழங்கும் நிறுவனத்திற்கு, மாநில அரசு பணம் தராமல் இருந்ததும், இந்நிறுவனம் கொடுத்த எச்சரிக்கைகளை மதிக்காமல் தொடர்ந்து பணம் தர மறுத்ததும், இந்த மரணங்களில் முடிந்துள்ளதென ஆசிய செய்தி மேலும் கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.