2017-08-16 16:36:00

மறைப்பணியாளர்களுக்கு எதிரான அரசு விளம்பரத்திற்கு கண்டனம்


ஆக.16,2017. கிறிஸ்தவ மறைப்பணியாளர்களுக்கு எதிராக ஜார்க்கண்ட் மாநில அரசு அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு விளம்பரத்தை, இந்திய திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ தலைவர்களும் வன்மையாகக் கண்டனம் செய்துள்ளனர்.

இத்தகைய ஒரு விளம்பரத்தை மாநில அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பது, அவமானத்திற்குரியது என்று, இந்திய ஆயர் பேரவையின் செயலர், ஆயர் தியோடோர் மாஸ்கரீனஸ் அவர்கள் UCA செய்தியிடம் கூறியுள்ளார்.

மகாத்மா காந்தி அவர்கள், கிறிஸ்தவ மறைப்பணியாளர்களைக் குறித்து வெளியிட்ட ஒரு கருத்தை, தவறான முறையில் திரித்து, இந்த விளம்பரத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்று கிறிஸ்தவ தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநில அரசு, கட்டாய மதமாற்ற சட்டத்தை அமலுக்குக் கொணர்ந்த ஆகஸ்ட் 12ம் தேதியன்று, இந்த விளம்பரமும் வெளியானது குறிப்பிடத்தக்கது என்று UCA செய்தி கூறியுள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் பழங்குடியின மக்களிடையே பல ஆண்டுகளாகப் பணியாற்றிவரும் கிறிஸ்தவ மறைப்பணியாளர்கள், அம்மக்களின் கல்வி, நலவாழ்வு ஆகியவற்றில் அக்கறை கொண்டிருந்தனரே தவிர, அவர்களை மதமாற்றம் செய்வதற்கு அல்ல என்று தலத்திருஅவை கூறியுள்ளது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.