2017-08-16 17:07:00

வைகை விரைவு இரயிலுக்கு ‘வயது 40’


ஆக.16,2017. மதுரைக்கும், சென்னைக்கும் இடையே, பகல்நேர இரயிலாக முதன்முதலாக இயங்க ஆரம்பித்த வைகை விரைவு வண்டியின் நாற்பதாம் ஆண்டு நிறைவு, ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாநகரம், வைகை நதிக் கரையில் உருவானதாகச் சொல்லப்படும்வேளை,  மதுரைக்கும், சென்னைக்கும் இடையே பகல்நேர இரயிலாக தொடர்ந்து இயங்கி கொண்டிருக்கும் வேக இரயிலுக்கும், ‘வைகை எக்ஸ்பிரஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.

தென்மாவட்ட மக்கள், வர்த்தகர்கள் உள்ளிட்டோரின் தொடர் முயற்சியால், 1977-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி தனது முதல் பயணத்தை தொடங்கிய வைகை விரைவு வண்டி, கடந்த 40 ஆண்டுகளாக, தடையில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கின்றது.  

12 மணி முதல் 15 மணி நேரமாக இருந்த, மதுரை-சென்னை இரயில் போக்குவரத்து, 8 மணி நேரத்தில், அதுவும் ஒரே நாளில் சென்னை சென்று திரும்பும் இரயிலாக வைகை விரைவு வண்டி உள்ளது.

போக்குவரத்து வளர்ச்சி பெறாத, அக்காலக் கட்டத்திலேயே மீட்டர்கேஜ் தண்டவாளத்தில் 100 கி.மீ. வேகத்தில் அதிவிரைவாகச் சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது வைகை விரைவு வண்டி.

கடந்த 40 ஆண்டுகளாக விபத்து ஏதுமின்றி இயக்கப்படும் பெருமை, ‘வைகை எக்ஸ்பிரஸ்’க்கு உண்டு எனவும் கூறப்படுகின்றது.

ஆதாரம் : தி இந்து/ வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.