சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

உலகம் \ அறிந்து கொள்வோம்

ஐந்து மாதங்களில் ஐந்து குளங்களைத் தூர்வாரிய இளைஞர் குழு!

ஐந்து குளங்களைத் தூர்வாரிய இளைஞர் குழுவில் ஒருவர் - RV

17/08/2017 16:26

ஆக.17,2017. ஐந்து பெரிய குளங்கள், சோழர் காலத்தின் இரண்டு தடுப்பணைகள், ஒரு வாய்க்கால் அனைத்தையும் ஐந்தே மாதங்களில் தூர்வாரி சீரமைத்துள்ளது, கோவையைச் சேர்ந்த இளையோர் குழு. தற்போது, சோழர்கள் காலத்தின் பாரம்பரியக் கிணறு ஒன்றை, இவ்விளையோர், தூர்வாரிக் கொண்டுள்ளனர்.

கோவையின் சுந்தராபுரம் அருகே லேத் பட்டறை வைத்திருக்கும் மணிகண்டன் என்பவர், கோவை பேரூர் பெரிய குளத்தின் நிலையைப் பார்த்து கலங்கிப்போனார். 300 ஏக்கர் பரப்பளவு கொண்ட அந்தக் குளம் முழுவதும் தூர்ந்தும், சீமைக் கருவேல மரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் கிடந்தது.

இதை சரிசெய்யவேண்டும் என்றெண்ணிய மணிகண்டன் அவர்கள், ‘பேரூர் குளத்தை தூர் வாருவோம்; ஒன்றிணைவோம்’ என்று ‘வாட்ஸ் அப்’வழியே தகவல் அளித்த அடுத்த சில நாட்களில், படிப்படியாக, 300 பேர் வரை குளத்தில் கூடிவிட்டனர். ஞாயிற்றுக் கிழமையில் மட்டும் வேலைசெய்வது என தீர்மானித்து, இரண்டே மாதத்தில் குளத்தை முழுமையாகத் தூர்வாரி முடித்தார்கள்.

பேரூர் பெரிய குளத்தை தூர் வாரியதும் தங்களுக்கு மிகப் பெரிய உத்வேகம் உண்டானது என்றும், ‘கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு’ என்ற பெயரில் முகநூல், வாட்ஸ் அப் குழுக்களில் தகவலைப் பதிவு செய்ததாகவும் கூறினார், மணிகண்டன்.

இதைத் தொடர்ந்து, ‘நமது கோவை... நமது பசுமை’ அமைப்பு, கனடா நாட்டைச் சேர்ந்த ‘தமிழா ஃபவுண்டேஷன், சிகாகோவைச் சேர்ந்த ‘நம்பிக்கை விழுதுகள்’ அமைப்பு ஆகியவற்றின் உதவியுடன், ஜே.சி.பி. இயந்திரங்களை வைத்து, செல்வ சிந்தாமணி குளம், செங்குளம், வெள்ளலூர் குளம், வெள்ளலூர் தடுப்பணை, 12.5 கி.மீட்டர் நீளம் கொண்ட குனியமுத்தூர் வாய்க்கால், சோழர் காலத்தின் தேவிசிறை தடுப்பணை ஆகியவற்றை தூர்வாரி, ஆக்கிரமிப்புகளை அகற்றியுள்ளனர், இவ்விளையோர்.

‘மரபுசார் குழு’ என்ற ‘வாட்ஸ் அப்’ குழுவினருடன் இணைந்து, ‘ஆழிக் கிணறு’ என்றழைக்கப்படும் சோழர் காலத்தின் பாரம்பரியம் வாய்ந்த கிணற்றை தூர் வாரும் பணியை இவ்விளையோர் துவக்கினர்.

வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தக் கிணற்றை ஆய்வு செய்து, பராமரிக்க வேண்டும் என்று தொல்லியல் துறைக்கும் கடிதம் எழுதியிருப்பதாக மணிகண்டன் அவர்கள் சொன்னார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி

17/08/2017 16:26