2017-08-17 16:30:00

32 பேரைக் கொன்றிருப்பது, காட்டுமிராண்டித்தனம் - ஆம்னெஸ்டி


ஆக.17,2017. "போதைப்பொருள் போர்" என்ற பெயரில், பிலிப்பீன்ஸ் அரசுத்தலைவர் Rodrigo Duterte அவர்கள், ஆகஸ்ட் 15ம் தேதி, 32 பேரைக் கொன்றிருப்பது, காட்டுமிராண்டித்தனமான செயல் என்று, ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் தென் கிழக்கு ஆசிய இயக்குனர், ஜேம்ஸ் கோமஸ் அவர்கள் கூறியுள்ளார்.

காவல்துறையினரின் அத்துமீறிய இந்த வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள், புலாக்கன் (Bulacan) பகுதியைச் சேர்ந்த வறியோரே என்று கோமஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டில் செயலாற்றிவரும் மனித உரிமை அமைப்பைத் தடைசெய்வதற்கு அரசுத்தலைவர் Duterte அவர்கள் முயன்றது உட்பட, அவரது ஆட்சி காலத்தில் மனித உரிமைகள் பெரும் சரிவைக் கண்டுள்ளது என்று கோமஸ் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

பிலிப்பீன்ஸ் நாட்டின் காவல்துறை மேற்கொண்ட கண்மூடித்தனமான தாக்குதல்களைக் கண்டித்து, "நீங்கள் வறியோர் என்றால், கொல்லப்படுவீர்கள்" என்ற தலைப்பில், இவ்வாண்டு சனவரி மாதம், ஆம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.