2017-08-17 16:22:00

கொரியாவில் போர் எதுவும் நிகழாது - அரசுத்தலைவர், மூன் ஜே-இன்


ஆக.17,2017. கொரிய தீபகற்பத்தில் போர் எதுவும் நிகழாது  என்றும், உரையாடல் வழியே தீர்வு காண்பது ஒன்றையே தான் நம்புவதாகவும் தென் கொரியாவின் அரசுத்தலைவர், மூன் ஜே-இன் (Moon Jae-in) அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.

மூன் ஜே-இன் அவர்கள், தென் கொரிய அரசுத்தலைவராகப் பணியேற்று 100 நாள்களை நிறைவு செய்துள்ளதையொட்டி, செய்தியாளர்களிடம் பேசிய வேளையில், தென் கொரிய அரசின் அனுமதியின்றி, அமெரிக்க ஐக்கிய நாடு எவ்வித இராணுவ முயற்சிகளிலும் ஈடுபடாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

வட கொரியா மேற்கொண்டு வரும் ஆபத்தான முயற்சிகள், கொரிய தீபகற்பப் பகுதியில் நெருக்கடியான நிலையை ஏற்படுத்தி வருகிறது என்பதைச் சுட்டிக்காட்டிய  அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், வடகொரியாவின் இத்தகைய முயற்சிகள், அந்நாட்டை பிற நாடுகளிலிருந்து மேலும் தனிமைப்படுத்தும் என்று கூறியுள்ளார்.

எவ்வித நெருக்கடியான சூழல் உருவானாலும், கொரிய தீபகற்பத்தில் மீண்டும் ஒருமுறை போர் உருவாகாது என்பதை தான் உறுதியாகக் கூறுவதாக அரசுத்தலைவர் மூன் ஜே-இன் அவர்கள், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.