2017-08-18 16:22:00

Madeiraவில் விபத்தில் பலியானவர்க்கு திருத்தந்தை செபம்


ஆக.18,2017. போர்த்துக்கல் நாட்டின் Madeira தீவில், ஆகஸ்ட் 15, இச்செவ்வாயன்று  விண்ணேற்பு அன்னை பெருவிழாவைச் சிறப்பிக்க கூடியிருந்த பக்தர்கள் மீது, திடீரென மரம் சாய்ந்ததில் 13 பேர் இறந்தனர் மற்றும் குறைந்தது 50 பேர் காயமுற்றதையடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அனுதாபத்தைத் தெரிவிக்கும் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

Madeira தீவின் Funchal ஆயர் António José Cavaco Carrilho அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள இச்செய்தியில், இவ்விபத்தில் இறந்தவர்கள், காயமடைந்தவர்கள், மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, திருத்தந்தையின் ஆழ்ந்த அனுதாபங்களும், செபங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விண்ணேற்பு அன்னை மரியா விழாவன்று, பவனியில் கலந்துகொள்வதற்காக விசுவாசிகள் தயாரித்துக்கொண்டிருந்தவேளை, 200 அடி உயரமான ஓக் மரம் விழுந்ததில் 13 பேர் இறந்தனர் மற்றும் குறைந்தது 49 பேர் காயமடைந்தனர். இவர்களில் நால்வர் குழந்தைகள் மற்றும், காயமடைந்த நால்வர், பிரான்ஸ், ஜெர்மனி, ஹாலந்து, ஹங்கேரி ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று, Funchal ஆயர் சொல்லியுள்ளார்.

Madeira தீவில், ஆகஸ்ட் 15ம் தேதியன்று நடைபெறும் விண்ணேற்பு அன்னை பெருவிழாவைச் சிறப்பிப்பதற்கு, ஆண்டுதோறும் ஏராளமான விசுவாசிகள் கூடுவது வழக்கமாகும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.