2017-08-19 16:00:00

அறிவற்ற பயங்கரவாத தாக்குதல்கள் நிறுத்தப்பட திருத்தந்தை


ஆக.19,2017. “இந்நாள்களில் தாக்குதல்களுக்குப் பலியான அனைவருக்காகவும் செபிக்கின்றேன். அறிவற்ற, கண்மூடித்தனமான பயங்கரவாத தாக்குதல், இவ்வுலகில் இனிமேலும் இடம்பெறாமல் இருப்பதாக!” என்ற வார்த்தைகளை, ஆகஸ்ட் 19, இச்சனிக்கிழமையன்று, தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆகஸ்ட் 19, இச்சனிக்கிழமையன்று ஃபின்லாந்து, ஆகஸ்ட் 18, இவ்வெள்ளியன்று புர்க்கினோ ஃபாசோவின் Ouagadougou, ஆகஸ்ட் 17, இவ்வியாழனன்று, இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரிலுள்ள Las Ramblas, ஆகஸ்ட் 15, ஈராக் என, இந்நாள்களில் இவ்வுலகின் பல இடங்களில் இடம்பெற்றுள்ள பயங்கரவாத தாக்குதல்களில் பலியானவர்களை நினைவுகூர்ந்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், பார்சலோனாவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்காக, அந்நகர் பேராலயத்தில், ஆகஸ்ட் 20, இஞ்ஞாயிறன்று சிறப்பு திருப்பலி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்னும், இத்தாலி நாட்டின் காசாமாரி (Casamari) ஆதீனத்தின் பசிலிக்கா அர்ச்சிக்கப்பட்டதன் எண்ணூறாம் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில், தனது பிரதிநிதியாக கலந்துகொள்வதற்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களை நியமித்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இத்தாலியின் Frosinone மாநிலத்திலுள்ள காசாமாரி ஆதீனம் ஆரம்பிக்கப்பட்ட 9ம் நூற்றாண்டு முதல், 13ம் நூற்றாண்டுவரை, பெனடிக்ட் துறவு சபை ஆதீனமாக இருந்தது. பின், பொருளாதார நெருக்கடி, அப்பகுதியின் உறுதியற்ற அரசு, எதிர் திருத்தந்தை 2ம் அனாகிளேட்டஸ், திருத்தந்தை 2ம் இன்னோசென்ட் ஆகிய இருவருக்குமிடையே நடந்த பூசல் போன்றவை காரணமாக, இந்த ஆதீனம் சரிவைக் கண்டது. இச்சூழலில், Clairvaux புனித பெர்னார்டு அவர்கள், சிஸ்டர்ஷியன் துறவு ஆதீனத்தில் சீர்திருத்தத்தை ஊக்குவித்தார். தனது புதிய சிஸ்டர்ஷியன் சபையோடு இந்த காசாமாரி ஆதீனத்தையும் இணைத்தார். இந்த சிஸ்டர்ஷியன் ஆதீனத்தின்கீழ், காசாமாரி ஆதீனமும், பசிலிக்காவும், 1203ம் ஆண்டுக்கும், 1217ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் முழுவதுமாக சீரமைக்கப்பட்டு மீண்டும் கட்டப்பட்டன.

காசாமாரி சிஸ்டர்ஷியன் ஆதீனத்தின் பசிலிக்கா அர்ச்சிக்கப்பட்டதன் 8ம் நூற்றாண்டு நிறைவு விழா, வருகிற செப்டம்பர் 15ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதியாக, கர்தினால் பரோலின் அவர்கள் கலந்துகொள்வார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.