2017-08-19 16:43:00

பிணையல் கைதிகளை தற்கொலை குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தும்...


ஆக.19,2017. பிலிப்பீன்ஸ் நாட்டில், அரசுப் படைகளைத் தாக்குவதற்கு, பிணையல் கைதிகளாக பிடித்து வைத்துள்ள அப்பாவி பொதுமக்களை, தற்கொலை குண்டுவெடிப்புக்குப் பயன்படுத்த, பயங்கரவாதக் குழு ஒன்று திட்டமிட்டு வருவதற்கு தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு ஆயர் ஒருவர்.

மிந்தனோவா பகுதியில், ஐஎஸ் இஸ்லாமிய அரசின் தூண்டுதலுடன் செயல்படும் Maute என்ற பயங்கரவாதக் குழுவின் இத்திட்டம் குறித்து, பீதேஸ் செய்தியிடம், மிகுந்த கவலை தெரிவித்துள்ளார், மராவி மறைமாவட்ட ஆயர் Edwin de la Peña.

மராவி பகுதியில், இராணுவத்திற்கும், இக்குழுவுக்குமிடையே மோதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன என்றும், 46 அப்பாவி பொதுமக்கள், இக்குழுவிடம் பிணையல் கைதிகளாக உள்ளனர் என்றும் கூறினார், ஆயர் Edwin de la Peña.

மேலும், பிலிப்பீன்ஸ் நாட்டு அரசுத்தலைவர் ரொட்ரிக்கோ துத்தர்தே அவர்கள் மேற்கொண்டுவரும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கையில், கொலைகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன என்று, அந்நாட்டு ஆயர் பேரவையின் சமூகநல அமைப்பின் செயலர் அருள்பணி Edwin Gariguez அவர்கள் கூறினார்.

போதைப்பொருள் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின்பேரில், கடந்த செவ்வாயன்று 32 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 109 பேர் கைது செய்யப்பட்டனர், அதற்கு அடுத்த நாள் 26 பேர் கொல்லப்பட்டனர் என்று கூறினார், அருள்பணி Edwin Gariguez.

ஆதாரம் : Fides/ AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.