2017-08-19 15:39:00

பொதுக்காலம் 20ம் ஞாயிறு - ஞாயிறு சிந்தனை


"வந்தாரை வாழவைக்கும் தமிழகம்" என்பது எனக்கு மிகவும் பிடித்த ஒரு கூற்று. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் நான் இந்த எண்ணத்தை பிற மாநிலத்தவரிடம், பிற நாட்டினரிடம் சொல்லி, விளக்கம் தந்து, பெருமைபட்டிருக்கிறேன். தமிழகத்தில் பயணம் செய்யும் வேளையில், ஒவ்வோர் ஊரின் எல்லையிலும் நம் மனதை மகிழ்விக்கும் ஒரு வாசகம் அங்கு வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக, சென்னையை நோக்கிச் செல்லும்போது, "சென்னை மாநகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது" என்று பெரிதாக எழுதி வைக்கப்பட்டிருக்கும். ஒவ்வோர் ஊரின் முகப்பிலும் அந்தந்த ஊரின் பெயரால் நமக்கு வரவேற்பு தரப்படும். அதேபோல், அந்த ஊரைவிட்டுச் செல்லும்போது, "நன்றி... மீண்டும் வருக" என்று அந்த ஊர், நமக்குப் பிரியாவிடை தரும்போது, மீண்டும் வரவேண்டும் என்ற அன்பு கட்டளையிடும். அயல் நாடுகளுக்குப் பயணங்கள் மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு விமான நிலையத்திலும் வரவேற்பு வார்த்தைகள் எழுதப்பட்டிருக்கும். விமானம் தரையிறங்கியதும், வரவேற்கும் வார்த்தைகள் ஒலிபெருக்கியில் ஒலிக்கும்.

உலகில் எந்த ஒரு நாடோ, நகரமோ "நீங்கள் இங்கே வரக் கூடாது, உங்களுக்கு இங்கே அனுமதியில்லை" என்று வெளிப்படையாகக் கூறுவதில்லை. ஆனால், நடைமுறையில் நடப்பதென்ன? நாடு விட்டு நாடு செல்பவர்களை, 'வாருங்கள்' என்று வார்த்தையால் சொல்லிவிட்டு, 'வராதீர்கள்' என்று செயல்களால் காட்டும் போக்கு பெருகிவருவதைக் கண்டு, கலங்கி நிற்கிறோம்.

உலகம் தன்னையே ஒரு முறை சுற்றி வர 24 மணி நேரம் ஆகிறது. இந்த 24 மணி நேரத்தில் ஒரு மணி நேரமாவது... ஏன், ஒரு பத்து நிமிடங்களாவது, உலகம் முழு அமைதியில் சுழல்கிறதா என்பது, பெரிய கேள்விக்குறி. நீ, நான்... நீங்கள், நாங்கள்... நாம், அவர்கள்... நாம், அந்நியர்கள்... என்று பாகுபாடுகள், வளர்ந்து வருவதால், சண்டைகள், கலவரங்கள் பெருகிவருகின்றன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளதுபோல், ‘சிறு, சிறு துண்டுகளாக நடைபெற்றுவரும் மூன்றாம் உலகப்போரினால்’ மனித சமுதாயம் ஒவ்வொருநாளும் காயப்பட்டுக்கொண்டே இருக்கிறது.  

இக்கலவரங்களில் பெரும்பாலும் ஈடுபடுவது, காயப்படுவது, உயிர்பலியாவது யார்? இளையோரே. ஆகஸ்ட் 17, கடந்த வியாழனன்று, ஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் நிகழ்ந்த வெறித்தாக்குதலில், மக்கள் நடந்து சென்ற நடைபாதையில் வாகனத்தை வேண்டுமென்று ஓட்டிச்சென்று, 13பேரைக் கொன்ற ஓட்டுநர், ஓர் இளைஞர் என்று ஊடகங்கள் கூறுகின்றன. இந்த வன்முறைக்கு, ISIS தீவிரவாதக் குழு பொறுப்பேற்றுள்ளது. கடந்த வார இறுதியில், அமெரிக்க ஐக்கிய நாட்டில், வெள்ளையினத்தவர் உரிமைக்காக நிகழ்ந்த ஒரு போராட்டம், மற்றும் அதற்கு எதிராக நிகழ்ந்த மற்றொரு போராட்டம் இவற்றில், ஒரு காரை, கூட்டத்தில் ஓட்டி ஒருவரைக் கொன்றவர் 20 வயது நிறைந்த இளையவர்.

இறைவன் பெயரால், அல்லது இனத்தின் பெயரால், அடிப்படைவாதக் குழுக்கள் செய்துவரும் ‘மூளைச் சலவை’க்குப் (brainwash) பலியாகும் பல்லாயிரம் இளையோரைப் பற்றி நாம் அறிவோம்.

2011ம் ஆண்டு, ஆகஸ்ட் 6 முதல் 11 முடிய, இங்கிலாந்தின் பல பகுதிகளில் கலவரங்கள் நடைபெற்றன. இக்கலவரங்கள் 'BlackBerry' கலவரங்கள் என்று அழைக்கப்பட்டன. காரணம், இக்கலவரங்களில் ஈடுபட்ட இளையோரில் பலர், கைப்பேசிகளில் பயன்படுத்தப்படும் 'BlackBerry' என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கலவரங்களை ஏற்பாடு செய்ததாகச் சொல்லப்படுகிறது. இங்கிலாந்து கலவரங்கள் நிகழ்ந்த வேளையில், இளையோரைக் குறித்து Ellen Teague என்ற இளம்பெண் செய்தித்தாள் ஒன்றில் கூறியிருந்த எண்ணம், நம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது. "நாளைய உலகைப் பற்றிய நம்பிக்கையை இளையோர் இழந்து வருகின்றனர். அதனால், இன்றைய உலகை அழிக்கவும் அவர்கள் தயங்குவதில்லை" என்று அவர் சொன்னது, சிந்திக்கவேண்டிய உண்மை.

இன்றைய உலகையும், நாளைய உலகையும் குறித்து நம்பிக்கை இழந்திருக்கும் இளையோருக்கு, நாம்-பிறஇனத்தவர் என்ற பிரிவுகளால் காயப்பட்டிருக்கும் நமக்கு, இன்றைய முதல் வாசகத்தில் இறைவன் கூறும் செய்தி, நம்பிக்கை தருகிறது. (இறைவாக்கினர் எசாயா 56: 1,6-7) நீதியில், நேர்மையில் உருவாகும் விடுதலையும், வெற்றியும் தன் மக்களுக்கு உண்டு என்று, இறைவன் உறுதி அளிக்கிறார். பிற இன மக்களும், இஸ்ரயேல் மக்களுடன், இறைவனின் ஆலயத்தில் இணையமுடியும் என்று, இறைவன் உறுதி அளிக்கிறார். தேனாக நம் காதுகளில் பாய்கின்றன, இறைவனின் உறுதிமொழிகள்.

விவிலியத்தில் காணக்கிடக்கும் இத்தகைய உறுதிமொழிகள், பலருக்கு, மன நிறைவையும், நம்பிக்கையையும் தந்துள்ளன. இன்றும் தருகின்றன. அவர்களில் ஒருவர் மகாத்மா காந்தி. தென்னாப்பிரிக்காவில், வழக்கறிஞராகப் பணியாற்றிவந்த காந்தி அவர்கள், விவிலியத்தை, முக்கியமாக, நற்செய்தியை, ஆழமாக வாசித்தபின், ஒரு தீர்மானத்திற்கு வந்தார். சாதியக் கொடுமைகளில் சிக்கித்தவித்த இந்தியாவுக்கு, கிறிஸ்தவமே விடுதலைத் தரும் சிறந்த வழி என்று அவர் தீர்மானித்தார். ஒரு கிறிஸ்தவராக மாற விரும்பினார். தன் விருப்பத்தை, நடைமுறைப்படுத்தும் எண்ணத்துடன், அவர், ஒரு ஞாயிறன்று, கிறிஸ்தவக் கோவிலுக்குச் சென்றார். கோவிலின் வாசலில், ஐரோப்பிய இனத்தவர் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அவர், காந்தியைக் கண்டதும், அவருக்கு அந்தக் கோவிலில் இடம் இல்லை என்றும், வெள்ளையர் அல்லாதோருக்கென அடுத்த வீதியில் உள்ள கோவிலுக்கு அவர் செல்லவேண்டும் என்றும் கூறினார். அன்று, அந்தக் கிறிஸ்தவக் கோவிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காந்தி அவர்கள், மீண்டும் அக்கோவில் பக்கம் திரும்பவேயில்லை. “கிறிஸ்தவர்களுக்குள்ளும் பாகுபாடுகள் உண்டெனில், நான் ஓர் இந்துவாக இருப்பதே மேல்" என்று அவர் தன் சுயசரிதையில் எழுதியுள்ளார்.

“பிற இன மக்களை நான் என் திருமலைக்கு அழைத்துவருவேன்... என் இல்லத்தில் அவர்களை மகிழச் செய்வேன்; அவர்கள் படைக்கும் எரிபலிகளும் மற்றப்பலிகளும் என் பீடத்தின் மேல் ஏற்றுக்கொள்ளப்படும்; ஏனெனில், என் இல்லம் மக்களினங்கள் அனைத்திற்கும் உரிய இறைமன்றாட்டின் வீடு என அழைக்கப்படும்” (எசாயா 56: 7) என்று, இறைவாக்கினர் எசாயா வழியாக இறைவன் சொல்வது, கனவுலகே தவிர, நடைமுறை உலகல்ல; நாம் வாழும் நடைமுறை உலகம், இன்னும் பிளவுபட்டிருக்கிறது என்பதை, நாம் நம்பும்வண்ணம், ஒவ்வொருநாளும், கொடுமைகள்  நிகழ்ந்துவருகின்றன.

வெறுப்பை வளர்க்கும் இக்கொடுமைகளைத் தாண்டி, நன்மைகள் நடக்கும் என்பதை எடுத்துரைக்கும் நற்செய்தி இன்று நமக்குத் தரப்பட்டுள்ளது. சமுதாயத்தின் விளிம்பில் வாழ்ந்து வந்த ஒரு கானானியப் பெண், நமக்கு நம்பிக்கை தருகிறார். நல்ல பல பாடங்களைச் சொல்லித் தருகிறார். தாழ்த்தப்பட்ட இனம், அவ்வினத்தில் பிறந்த ஒரு பெண், தீயஆவி பிடித்த மகளுக்குத் தாய் என்று, அடுக்கடுக்காக, சுமத்தப்பட்ட பல தடைகளை, துணிவுடன் தாண்டி, இந்தப் பெண், இயேசுவை அணுகி வருகிறார். அவரை ஒரு பொருட்டாகக்கூட மதிக்காத இயேசுவிடம், மீண்டும், மீண்டும், அவர் வருகிறார். இஸ்ரயேல் மக்களை குழந்தைகளாகவும், பிற இனத்தவரை நாய்களாகவும் உருவகித்துப் பேசும் இயேசுவின் கடினமான சொற்களையும் மீறி, அப்பெண் இயேசுவை அணுகி வருகிறார். இயேசு, அப்பெண்ணிடம் கூறும் கடுமையான சொற்கள், நம்மை அதிர்ச்சயடையச் செய்கின்றன.

தன் மகளை எப்படியாகிலும் குணமாக்கிவிடவேண்டும் என்ற ஒரே  குறிக்கோளுடன்... அதை, ஒருவகையான வெறி என்று கூடச் சொல்லலாம்... அத்தகைய வெறியுடன் அப்பெண் இயேசுவை அணுகியிருந்ததால், அவர் கூறிய கடினமான சொற்களையும் நேர்மறையான கண்ணோட்டத்துடன் புரிந்துகொண்டு, அந்தத் தாய், தன் விண்ணப்பத்தை மீண்டும், மீண்டும் இயேசுவிடம் வைக்கிறார். தளராத, உறுதியான விசுவாசத்தின் ஓர் எடுத்துக்காட்டாக அந்தக் கானானியப் பெண் நமக்கு முன் உயர்த்தப்படுகிறார். “அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்” (மத். 5: 28) என்று இயேசு அவரை அனுப்பி வைக்கிறார்.

இஸ்ரயேல் மக்களுக்கும் பிறருக்கும் உள்ள பிரிவுகளை, உயர்வு, தாழ்வுகளை இயேசு வலியுறுத்திக் கூறியபோது, அப்பிளவுகளை எல்லாம் தாண்டி, இறைவனின் கருணை உண்டு என்பதை, ஆணித்தரமாக உணர்த்திய கானானியப் பெண்ணிடம் நாம் கற்றுக் கொள்ளக்கூடியப் பாடங்கள் பல உள்ளன. அந்தப் பெண் கொண்டிருந்த விசுவாசத்தின் ஆழத்தைக் கண்ட இயேசு, அவர் பிற இனத்தவர், அதுவும் பிற இனத்தைச் சார்ந்த ஒரு பெண் என்பதையெல்லாம் புறம்தள்ளி, அவரது விசுவாசத்தை, கூட்டத்திற்கு முன் புகழ்ந்தாரே... அங்கும் நமக்குப் பாடங்கள் உள்ளன.

மனதைப் புண்படுத்தும் கடினமானச் சொற்களைக் கொண்டு கானானியப் பெண்ணிடம் பேசிய இயேசு, இறுதியில் அவரது நம்பிக்கையைப் புகழ்ந்தார். "உமது நம்பிக்கை பெரிது" என்று, வேற்றினத்தைச் சார்ந்த பெண்ணை இயேசு புகழ்வதைக் கேட்கும்போது, "நம்பிக்கை குன்றியவர்களே" என்று (மத். 8:26; 14:31; 16:8) அவ்வப்போது இயேசு தம் சீடர்களைக் கடிந்துகொண்ட சொற்களும் நம் மனதில் எதிரொலிக்கின்றன.

கிறிஸ்தவ மறையில் பிறந்து, வளர்ந்துவரும் பலர், நம்பிக்கையில் குன்றியிருப்பதையும், கிறிஸ்துவைப்பற்றி ஓரளவே தெரிந்த வேற்றுமதத்தவர், பேரளவு நம்பிக்கை கொண்டிருப்பதையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இன்றைய நற்செய்தியில் நாம் சந்திக்கும் கானானியப் பெண்ணைப்போல, வேற்று மதத்தவர் பலர், கிறிஸ்தவர்களாகிய நாம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு, சவாலாக அமைந்த நேரங்களை எண்ணி, இறைவனுக்கு நன்றி கூறுவோம்.

இன்றைய உலகின் மீதும், நாளைய உலகின் மீதும் நம்பிக்கை இழந்துள்ள இளையோரைப்பற்றி சிந்திக்கும் வேளையில், நம்பிக்கைதரும் வண்ணம் செயலாற்றும் இளையோரையும் எண்ணி, இறைவனுக்கு நன்றிசொல்ல நாம் அழைக்கப்பட்டுள்ளோம். பார்சலோனாவில் நிகழ்ந்த வன்முறைத் தாக்குதலுக்கு, பதிலாக, வெறுப்பை நாங்கள் காட்டமாட்டோம் என்று அந்நகர மக்கள் தீர்மானித்திருப்பது, நம்பிக்கையைத் தருகிறது. மூன்று ஆண்டுகளுக்குமுன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தென்கொரியாவில் மேற்கொண்ட முதல் ஆசியத் திருப்பயணத்தின் போது, நம்பிக்கையை வளர்க்க இளையோர் அழைக்கப்பட்டுள்ளனர் என்பதை, ஆசிய இளையோரிடம் கூறினார். திருத்தந்தை ஆற்றிய அந்த உரையிலிருந்து ஒரு சில வரிகள்....

"நாம் விதைக்கவிரும்பும் நன்மை, நம்பிக்கை ஆகிய விதைகளை விழுங்கிவிடும் சுயநலம், அநீதி, பகைமை ஆகிய களைகள் அதிகம் வளர்ந்து வருகின்றன. செல்வம், அதிகாரம், இன்பம் என்ற பொய் தெய்வங்களின் வழிபாடு வளர்ந்து வருகிறது. பொருள் வசதிகள் நாளுக்கு நாள் பெருகிவந்தாலும், வெறுமை, தனிமை ஆகிய பாலைவனமும் மனித உள்ளங்களில் படர்ந்து வருகிறது. இந்த உலகில், இளையோராகிய நீங்கள் நம்பிக்கையை வளர்க்க அழைக்கப்பட்டுள்ளீர்கள்" என்று திருத்தந்தை ஆசிய இளையோரிடம் கூறினார்.

குறுகிய சுயநலச் சிறைகளிலிருந்து வெளியேறி, பரந்த உள்ளத்தை வளர்க்கும் வகையில் கூறப்பட்டுள்ள வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்ற மந்திரத்துடன் நம் சிந்தனைகளை ஆரம்பித்தோம். முடிவிலும், ஓர் அழகிய தமிழ் செய்யுள் கூறும் சில எண்ணங்களுடன் நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம்.

யாதும் ஊரே; யாவரும் கேளிர்; தீதும் நன்றும் பிறர்தர வாரா;

என்று துவங்கும் கணியன் பூங்குன்றனாரின் கவிதை வரிகள், வெறும் கவிதையாக, பாடலாக, நின்றுவிடாமல், நடைமுறை வாழ்வின் இலக்கணமாக மாற முடியும் என்ற நம்பிக்கையுடன், இக்கவிதையின் பொருளுணர்ந்து, நம் சிந்தனைகளை நிறைவு செய்வோம். இதோ, இக்கவிதையின் பொருளுரை:

எல்லா ஊரும் எம் ஊர்

எல்லா மக்களும் எம் சொந்தம்

நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை

துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை

சாதல் புதுமை யில்லை; வாழ்தல்

இன்பமென்று மகிழ்ந்தது இல்லை...

பிறந்து வாழ்வோரில்

சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை

பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.