2017-08-19 16:26:00

வெனெசுவேலாவில் வெளிநாட்டு இராணுவத் தலையீடுகளுக்கு எதிர்ப்பு


ஆக.19,2017. வெனெசுவேலா நாட்டில் கடும் நெருக்கடி நிலைகள் நிலவுகின்றபோதிலும், அந்நாட்டில் எந்தவித வெளிநாட்டு இராணுவத் தலையீடும் இருக்கக் கூடாது என, அந்நாட்டு தலத்திருஅவை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

வெனெசுவேலா நாட்டுத் தலைநகர் கரகாஸ் பேராலயத்தின் 150ம் ஆண்டு நிறைவு திருப்பலியை நிறைவேற்றியபின் செய்தியாளர்களிடம் பேசிய, கரகாஸ் பேராயர் கர்தினால் Jorge Urosa Savino அவர்கள், அமெரிக்க ஐக்கிய நாடோ, கியூபாவோ அல்லது வேறு எந்த நாடோ, வெனெசுவேலாவிற்கு, இராணுவத்தை அனுப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார்.

அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்டு டிரம்ப் அவர்கள், வெனெசுவேலாவிற்கு இராணுவத்தை அனுப்பக்கூடிய வாய்ப்புகள் பற்றி பொதுவாக அறிக்கை வெளியிட்டதையடுத்து, இவ்வாறு அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார், கர்தினால் Savino.

வெனெசுவேலா நாடு கடும் பிரச்சனையை எதிர்கொண்டு வருவது தொடர்பாக, ஏனைய நாடுகள் தங்களின் இராணுவத் தலையீடுகள் பற்றி பேசத் தொடங்கியுள்ளன என்றும், தங்களின் நாட்டுப் பிரச்சனையை தாங்களே தீர்த்துக்கொள்வோம் என்றும், கர்தினால் Savino அவர்கள் கூறியுள்ளார்.

ஆதாரம் : CWN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.