2017-08-21 16:13:00

புலம்பெயர்ந்தோரை வரவேற்றலும் வாழவைத்தலும், சமூகக் கடமை


ஆக.,21,2017. குடியேற்றதாரர்களையும், புலம்பெயர்ந்தோரையும் வரவேற்று, பாதுகாத்து, அவர்களை ஊக்குவித்து, சமூகத்தோடு இணைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை என்ற கருத்தை மையமாக வைத்து, 'உலக புலம்பெயர்ந்தோர் நாள்' செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

வரும் ஆண்டு ஜனவரி மாதம் 14ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ள, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலக நாளுக்கென இத்திங்களன்று செய்தி வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போர் மற்றும் ஏழ்மையின் காரணமாக குடிபெயரும் மக்கள், நம் கதவுகளைத் தட்டும்போது, இயேசுவைச் சந்திப்பதற்குரிய வாய்ப்பாக அதனை ஒவ்வொருவரும் எண்ணிச் செயல்படவேண்டும் என அதில் கூறியுள்ளார்.

திருஅவை கோட்பாடுகளை மையமாக வைத்து 4 முக்கிய தலைப்புக்களை முன்வைத்துள்ளார் திருத்தந்தை.

முதல் கருத்தாக, குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் வரவேற்கப்படவேண்டும் என உரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாதிப்புகளிலிருந்து அடைக்கலம் தேடிவருவோர், சட்டரீதியான பாதுகாப்புடன் நுழைவதற்கு ஏனைய நாடுகள் உதவுவதுடன், மனிதாபிமானமுள்ள பாதைகள் திறக்கப்படவேண்டும் என விண்ணப்பித்துள்ளார்.

ஒரு நாட்டின் மக்களை முற்சார்பு எண்ணங்களுடன் மொத்தமாக ஒதுக்குதல், புகலிடம் தேடும் மக்களை தடுப்புக்காவல் மையங்களில் வைத்தல் போன்றவை குறித்தும் தன் செய்தியில் கவலையை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புகலிடம் தேடுவோருக்கு பாதுகாப்பு அளிக்கப்படவேண்டியதை தன் இரண்டாவது கருத்தாக வலியுறுத்தும் திருத்தந்தை, புலம்பெயர்ந்தோர் பாதுகாப்புடன் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும், அவர்களின் குழந்தைகள் கல்வி கற்பதற்கும் இருக்கும் உரிமைகள் ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என கேட்டுள்ளார்.

புகலிடம் தேடி, புதிதாக நாட்டிற்குள் நுழையும் ஒவ்வொருவரும், தாங்கள் மக்களுள் ஓர் அங்கம் என்பது உணர வைக்கப்பட்டு, அவர்களின் வாழ்வு ஊக்கப்படுத்தப்படவேண்டும் என்பதை, தன் மூன்றாவது கருத்தாக வலியுறுத்தியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

புகலிடம் தேடுவோர், அவர்கள் குடிபெயர்ந்துள்ள புதிய சமூகத்தோடு இணைக்கப்பட உதவ வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நான்காவது கருத்து.

புதிய சமுதாயத்தில் அவர்களை ஒருங்கிணைப்பது என்பது, அவர்களின் தனித்தன்மையை, அதாவது அவர்களுக்கே உரிய கலாச்சாரத்தை அழிப்பதன் வழியாக அல்ல என்பதை வலியுறுத்திக் கூறியுள்ளார் திருத்தந்தை.

இருவேறு கலாச்சாரங்கள் தங்களுக்குள் சந்திக்கும் வாய்ப்பை ஆதரிக்கவேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்துள்ளார், திருத்தந்தை. 

வரவேற்றல், பாதுகாத்தல், ஊக்கமூட்டல், மற்றும், சமூகத்திற்குள் ஒன்றிணைத்தல் என்ற நான்கு கருத்துக்களையும் தன் செய்தியில் முன்வைத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவற்றின் வெற்றிக்கு, அரசியல் தலைவர்கள் மற்றும் சமூகத் தலைவர்களின் ஒத்துழைப்பிற்கும் அழைப்புவிடுத்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.