2017-08-21 16:32:00

வன்முறை நிகழ்வுகள் இடம்பெறாதிருக்க‌ செபிப்போம்


ஆக.,21,2017. அண்மைய நாட்களில் புர்கினோ ஃபாசோ, இஸ்பெயின் மற்றும் ஃபின்லாந்து நாடுகளில் பயங்கரவாத தாக்குதலுக்கு எண்ணற்றோர் பலியாகியுள்ளது குறித்து, தன் மூவேளை செப உரை இறுதியில், ஆழ்ந்த கவலையை வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

அண்மைய பயங்கரவாத தாக்குதல்களால் நம் இதயங்கள் துன்ப வலியைத் தாங்கியுள்ளன என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாக்குதல்களில் உயிரிழந்தவர்களுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் செபிப்போம் எனக் கூறி, தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளுடன் இணைந்து 'அருள்நிறை மரியே' என்ற செபத்தை செபித்தார்.

இத்தகைய வன்முறை நிகழ்வுகளிலிருந்து உலகைக் காப்பாற்றவேண்டும் என அமைதி மற்றும் கருணையின் இறைவனை நோக்கி செபிப்போம் எனவும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

இம்மாதம் 14ம் தேதி புர்கினோ ஃபாசோ நாட்டின் தலைநகரிலுள்ள துருக்கி உணவகத்தில் புகுந்த தீவிரவாதிகள், 18 பேரை கொலைச் செய்துள்ளனர். இதே மாதம் 17ம் தேதி இஸ்பெயினின் பார்சலோனா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில், 13பேர் உயிரிழந்தனர், மற்றும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.

கடந்த வெள்ளியன்று, ஃபின்லாந்து நாட்டின் Turku  எனுமிடத்தில் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் இறந்தனர், எட்டு பேர் காயமடந்தனர்.

இந்நிகழ்வுகள் குறித்து தன் ஆழ்ந்த கவலையை, ஞாயிறு மூவேளை செப உரையின் இறுதியில் வெளிப்படுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாதிருக்க இறைவனை நோக்கி செபிப்போம் என அழைப்புவிடுத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.