2017-08-21 14:44:00

வாரம் ஓர் அலசல் – கதவுகளைத் திறக்கும் கடவுள்


ஆக.21,2017. அன்று வயதான மனிதர் ஒருவர், ஒரு தொலைக்காட்சி நிகழ்வுக்காக அழைக்கப்பட்டிருந்தார். எதற்காக இந்த அழைப்பு என்பது அவருக்குத் தெரியாது. அவர் அன்று அந்த மேடையில் ஏறியதும், அரங்கில் அமர்ந்திருந்த அனைவரும் மரியாதையோடு எழுந்து நின்று கைதட்டி வணக்கம் சொன்னார்கள். இவருக்கு ஒரே வியப்பு. ஒன்றும் புரியவில்லை. இவர் அப்படி என்ன செய்தார், இவ்வளவு பேரின் மரியாதையைப் பெறுவதற்கு! பிரித்தானியாவைச் சேர்ந்த சர் நிக்கோலாஸ் வின்டன் (Nicholas George Winton) என்ற இந்த வயதானவர், நாத்சி ஜெர்மனியின் ஆக்ரமிப்பிலிருந்த முன்னாள் செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து, 1938ம் ஆண்டில், தனியொரு ஆளாக, 669 யூதச் சிறாரைப் பாதுகாப்பாக பிரித்தானியாவுக்கு அழைத்து வந்தவர். அதோடு, இச்சிறார், பிரித்தானியாவில் புதிய குடும்பங்களில் வாழவும் இவர் உதவினார். இச்சிறாரில் பெரும்பாலானவர்களின் பெற்றோர், ஆஷ்விஷ் நாத்சி வதை முகாமில் கொல்லப்பட்டுவிட்டனர். வின்டன் அவர்கள், இச்சிறாரை தான் காப்பாற்றியது பற்றி, ஒருபோதும் யாரிடமும் சொன்னதில்லை. ஆனால் இது நடந்து ஐம்பது ஆண்டுகளுக்குப்பின், 1988ம் ஆண்டில் இவரின் இந்நற்செயல் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. வீட்டின் பரணில் (மேல்மாடியிலுள்ள சிறிய அறையில்) பத்திரமாக வைக்கப்பட்டிருந்த வின்டன் அவர்களின் நாள்குறிப்பேட்டை, இவரின் மனைவி கிரேட் (Grete Gjelstrup) அவர்கள், தற்செயலாக எடுத்தபோது, அதில் வின்டன் அவர்கள் காப்பாற்றிய எல்லாச் சிறாரின் பெயர்கள், அச்சிறார் பற்றிய விபரங்கள் மற்றும் புகைப்படங்களைக் கண்டார். அவற்றை செய்தியாளர் ஒருவரிடம் கொடுத்தார். அதன் பயனாக, வின்டன் அவர்கள் ஒரு தொலைக்காட்சி நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அந்த நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் அவர் காப்பாற்றிய சிறார் என்பது அவருக்குத் தெரியவில்லை. இப்பொழுது வயது வந்தவர்களாக வளர்ந்திருந்த அவர்கள் எல்லாரும் ஒவ்வொருவராக மேடைக்கு வந்து வின்டன் அவர்களுக்கு நன்றி செலுத்தினார்கள். அந்த அரங்கத்தில் உங்களுக்கு நன்றி உங்களுக்கு நன்றி.. என்ற சொற்களே கேட்டுக்கொண்டிருந்தன. வின்டன் அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர். இவர் தனது 106வது வயதில், 2015ம் ஆண்டு ஜூலை முதல் தேதி காலமானார்.  பிரித்தானிய ஷிண்டலர் (British Schindler) எனப் பாராட்டப்படும், இந்த மனிதாபிமான ஆர்வலரை பிரிட்டன் அரசி 2ம் எலிசபெத், செக் குடியரசுத் தலைவர், Miloš Zeman, இன்னும் ஊடகங்கள் பலவும் கவுரவித்துள்ளன.

நாம் எல்லாரும், நம் வாழ்வைக் கடந்து செல்லும் ஒவ்வொருவர் வழியாகவும் ஏதாவது ஒன்றைக் கற்றுக்கொள்கின்றோம். அவற்றில் சில பாடங்கள் வேதனையாகவும், சில பாடங்கள் வேதனையின்றியும், சில பாடங்கள் விலைமதிப்பற்றவையாகவும் உள்ளன. எனவே நாம் நம் வாழ்வைத் திரும்பிப் பார்க்கும்போது கடவுளுக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம். அதேநேரம், வாழ்வை முன்னோக்கிப் பார்க்கும்போது கடவுளை நாம் நம்ப வேண்டும். யாராலும் திறக்க முடியாதபடி, கடவுள் நமக்கு கதவுகளை மூடுகிறார். அதேநேரம், யாராலும் மூட முடியாதபடி கடவுள் நமக்கு கதவுகளைத் திறக்கிறார். நம் வாழ்வு தேவைகளின்றி, பிரச்சனைகளின்றி ஒருபோதும் அமையாது. ஆனால், ஓர் அர்த்தமுள்ள வாழ்வு வாழ்வதற்கு, அன்பான கடவுள் நம்மை என்றும் வழிநடத்துகிறார் என்பதை மட்டும் நாம் மறக்கக் கூடாது.  

உங்கள் பிள்ளைகள் பள்ளிக் கட்டணத்தைச் செலுத்தாததால், அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என, ஒருநாள் லூயிஸ் அவர்களுக்கு, அவர் பிள்ளைகள் படிக்கும் பள்ளியிலிருந்து ஒரு தொலைபேசி செய்தி வந்தது. உடனே அவர் தலைமையாசிரியரிடம் கெஞ்சினார். எந்தப் பயனும் இல்லை. கவலையோடு தொலைபேசியை கீழே வைத்தார் லூயிஸ். உடனே மற்றொரு தொலைபேசி அழைப்பு. ஒரு வாரத்திற்குள் வீட்டு வாடகையைச் செலுத்தாவிடில், வீட்டை காலி செய்யவேண்டும் என்று, வீட்டு உரிமையாளர் மிரட்டினார். இதைக் கேட்டு கவலையுடன் இருந்த லூயிஸ் அவர்களின் கைபேசியில் ஒரு குறுஞ்செய்தி இருந்தது. அவரோடு சேர்ந்து தொழில்புரியும் நபருக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இவர் செலுத்தவில்லை. எனவே இவரைக் கைது செய்ய காவல்துறை வந்துகொண்டிருக்கின்றது என்று, அதில் இருந்தது. அதிர்ச்சியில் உறைந்துபோனார் லூயிஸ். அவர் கடவுளிடம் முறையிடத் தொடங்கினார். கடவுளே எனக்கு உன்னையன்றி வேறு துணையில்லை. நான் மிகவும் கஷ்டத்தில் இருக்கிறேன். உமது உதவி எனக்கு மிகவும் தேவை. தயவுகூர்ந்து உதவி செய் என அழுது புலம்பி மன்றாடினார். அப்போது அவர் அருகில் ஒருவர் நின்று சொல்வது போன்று ஒரு குரல் கேட்டது. எழுந்து நடனமாடு என்றது அக்குரல். நானோ மிகுந்த கவலையில் உள்ளேன், இந்நேரத்தில் இது விசித்திரமாக உள்ளதே என நினைத்தார். ஆனாலும் ஒரு ஆன்மீகப் பாடல் குறுந்தகட்டை ஒலிக்கச் செய்தார். ஆடினார். எல்லாவற்றையும் மறந்து கடவுள் முன்னால் ஆடினார். அவர் மனதில் மகிழ்வும் அமைதியும் நிலவ ஆரம்பித்தன. திடீரென வங்கியிலிருந்து ஒரு குறுஞ்செய்தி அவரது கைபேசிக்கு வந்தது. நீண்டகாலமாக இவர் ஒருவரோடு, தொழில் தொடர்பாக செய்துகொண்டிருந்த ஒப்பந்த தொகை அவருக்குச் செலுத்தப்படாமலே இருந்தது. அது இப்போது இவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது என்பதே அந்தக் குறுஞ்செய்தி. இது கனவா என அவர் யோசித்தார் லூயிஸ். சட்டையை மாட்டிக்கொண்டு உடனடியாக வங்கிக்குச் சென்று பத்தாயிரம் டாலர் பணத்தைப் பெற்றார் அவர். வங்கியிலேயே நன்றி கடவுளே என கத்தினார். என்ன இவர் பைத்தியமா என, வங்கியில் எல்லாரும் ஒருமாதிரி இவரைப் பாரத்தனர். லூயிஸ் உடனடியாக அப்பணத்தைப் பிரித்து, பிள்ளைகளின் பள்ளிக்கும், தனது தொழில் பங்குதாரருக்கும், வீட்டு வாடகைக்கும் தொகைகளைச் செலுத்தினார். நம் வாழ்விலும், வேறு யாராலும் மூட முடியாதபடி கடவுள் நமக்கு கதவுகளைத் திறக்கிறார் அல்லவா?

2010ம் ஆண்டு ஜுலையில், இஸ்ரேல் அரசின் Yad Vashem நிறுவனம், எல் சால்வதோர் நாட்டு அரசியல் தூதர் José Arturo Castellanos அவர்களுக்கு, “நாடுகள் மத்தியில் நேர்மையாளர் (Righteous Among the Nations)” என்ற விருதை வழங்கி கவுரவித்தது. Castellanos அவர்கள் இறந்தபின், இவ்விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர், தனது 44வது வயதில், இங்கிலாந்துக்கும், பின் ஜெர்மனிக்கும் அரசியல் தூதராக அனுப்பப்பட்டார். இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர்மனியில் யூதர்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைக் கண்டு, அவர்களுக்கு எல் சால்வதோர் நாட்டு விசா கொடுப்பதற்கு அரசிடம் அனுமதி கேட்டார். அது மறுக்கப்பட்டது. பின் 1942ம் ஆண்டில் ஜெனீவாவுக்கு தூதராகச் சென்றபோதும் அதேபோன்று அரசிடம் விண்ணப்பித்தார். அப்போதும் அனுமதி கிடைக்கவில்லை. பின், இவர் தனது சொந்த முயற்சியால், துணிச்சல் மற்றும், தந்திரத்துடன், நாற்பதாயிரம் யூதர்களைக் காப்பாற்றினார். இவர் ஒரு கத்தோலிக்கர்.

நம் ஒவ்வொருவர் வாழ்விலும் கடவுள் யாரோ ஒருவரால், அல்லது சிலரால் நன்மைகளைச் செய்து வருகிறார். யாராலும் மூட முடியாதபடி கதவுகளை நமக்குத் திறக்கிறார். இம்மாதம் 15ம் தேதி இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசு பள்ளி மாணவர்கள் எழுபது பேரைத் தத்தெடுத்துள்ளார், 76 வயது நிரம்பிய சமூக ஆர்வலர் ஒருவர். ஆந்திர மாநிலம், சித்தூரைச் சேர்ந்த பர்வதரெட்டி பார்த்தசாரதி நாயுடு என்ற இந்த ஆர்வலர், கடந்த 40 ஆண்டுகளாக, நூற்றுக்கணக்கான ஏழை பள்ளி மாணவ, மாணவியருக்கு பாட புத்தகங்கள், பள்ளிச் சீருடைகள், மற்றும் உணவும் அளித்து, அவர்கள் கல்வி கற்க மிகவும் உதவி செய்து வருகிறார். இந்நிலையில், பார்த்தசாரதி நாயுடு அவர்கள், இவ்வாண்டு சுதந்திர தின விழாவன்று சித்தூரில் உள்ள ஒரு நகராட்சி பள்ளியில் படிக்கும் எழுபது மாணவ, மாணவியரைத் தத்தெடுத்து, அவர்களுக்குத் தேவையான பள்ளி சீருடைகள், பாட புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் போன்றவற்றுடன் இலவச உணவும் வழங்க முன்வந்துள்ளார்.

தமிழகத்தில் பஞ்சாயத்து அரசு பள்ளி ஒன்றில், ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுபவர் அன்னபூரணி மோகன். இவர், தன் மாணவர்கள் ஆங்கிலத்தில் புலமை பெறவேண்டும் என்ற நோக்கத்தில், அதற்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளுக்காக,  தனது நகைகளை விற்று வசதி செய்து கொடுத்துள்ளார். மாணவர்கள் ஆங்கிலத்தில் நன்றாகப் பேசவும், எழுதவும் கற்றுக்கொடுத்து வருகிறார் என செய்திகளில் வாசித்தோம்.

வாழ்வில் நல்லது செய்பவருக்கு, எல்லாமே நல்லதுதான் நடக்கின்றது. பெரியவர்கள் சொல்கிறார்கள்... பணம் தேவையில்லை என்பதுபோல் வேலை செய்; யாரும் உன்னை புண்படுத்தவில்லை என்பதுபோல் அன்பு செய்; யாரும் உன்னைப் பார்க்கவில்லை என்ற எண்ணத்துடன் நடனம் ஆடு; யாரும் உன் பாட்டைக் கேட்கவில்லை என்ற எண்ணத்துடன் பாடு; சொர்க்கத்தில் இருப்பதுபோல பூமியில் வாழ் என்று. ஒருவர் கடவுளிடம் கேட்டார், வாழ்வை அனுபவிக்க எனக்கு எல்லாவற்றையும் கொடு என்று. அதற்கு கடவுள் சொன்னார் – நீ எல்லாவற்றையும் அனுபவிக்க உனக்கு வாழ்வைக் கொடுத்துள்ளேன் என்று.  

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.