2017-08-22 15:24:00

கர்தினால் பரோலின், ஆர்த்தடாக்ஸ் வெளியுறவு தலைவர் சந்திப்பு


ஆக.22,2017. மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை தலைமையகத்தின் வெளியுறவுத்துறை தலைவர் பேராயர் ஹிலாரியோன் அவர்களுடன் இடம்பெற்ற இரண்டு மணிநேர சந்திப்பு, மிகவும் பயனுள்ளதாகவும், உறவுகள் மேம்பட வழியமைத்ததாகவும் அமைந்திருந்தது என்று தெரிவித்தார், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின்.

இத்திங்களன்று இரஷ்ய நாட்டில் நான்கு நாள் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள கர்தினால் பரோலின் அவர்கள், முதலில், மாஸ்கோ ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை தலைமையகத்தில், பேராயர் ஹிலாரியோன் அவர்களைச் சந்தித்து உரையாடினார்.

தற்போதைய உலகின் சூழலில், உரோம் கத்தோலிக்கத் திருஅவைக்கும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைக்கும் இடையே நிலவிவரும் உறவுகள், சிரியாவிலும், உக்ரைனிலும் இடம்பெறும் சண்டைகள், வெனெசுவேலா நாடு பற்றிய திருப்பீடத்தின் அக்கறை போன்ற விவகாரங்கள் இச்சந்திப்பில் இடம்பெற்றதென, செய்தியாளர் கூட்டத்தில் கூறினார், கர்தினால் பரோலின்.

மேலும், இச்செவ்வாயன்று, இரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் Sergei Lavrov அவர்களையும், இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் முதுபெரும்தந்தை கிரில் அவர்களையும், சந்தித்த கர்தினால் பரோலின் அவர்கள், இப்புதனன்று இரஷ்ய அரசுத்தலைவர் Vladimir Putin அவர்களையும் சந்திப்பார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.