2017-08-22 15:44:00

திருத்தந்தையின் 'உலக புலம்பெயர்ந்தோர் நாள்' செய்திக்கு வரவேற்பு


ஆக.22,2017. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 104வது உலக குடியேற்றதாரர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நாளுக்கென, இத்திங்களன்று வெளியிட்ட செய்தியை வரவேற்றுள்ளது, பிரித்தானியாவின் கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு ஒன்று.

“குடியேற்றதாரரையும், புலம்பெயர்ந்தோரையும் வரவேற்று, பாதுகாத்து, அவர்களை ஊக்குவித்து, சமூகத்தோடு இணைக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமை” என்ற கருத்தை மையமாக வைத்து, திருத்தந்தை வெளியிட்ட செய்தி, மிகவும் நலிந்த மக்களைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள திருஅவையோடு, அரசியல் தலைவர்களும், பொது மக்கள் சமுதாயமும் இணைய வேண்டுமென அழைப்பு விடுக்கின்றது. 

இச்செய்தி பற்றி, வத்திக்கான் வானொலியில் கருத்து தெரிவித்த, CAFOD என்ற பிரித்தானிய கத்தோலிக்க பிறரன்பு அமைப்பின் கொள்கைப் பிரிவின் தலைவர் Graham Gordon அவர்கள், திருத்தந்தையின் இச்செய்தி, குடியேற்றதாரர் மற்றும், புலம்பெயர்ந்தோரைப் பாதுகாப்பதற்கு அரசியல் தலைவர்களுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கின்றது என்று தெரிவித்தார்.

குடிபெயர்ந்துள்ள அல்லது புலம்பெயர்ந்துள்ள மக்களில் பாதிப்பேர் 18 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், இவர்களுக்கே அதிகப் பாதுகாப்பு தேவைப்படுகின்றது என்றும் கூறினார், Gordon.

'உலக புலம்பெயர்ந்தோர் நாள்', 2018ம் ஆண்டு சனவரி 14ம் தேதி சிறப்பிக்கப்படவுள்ளது. 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.