2017-08-22 15:25:00

முத்தலாக் நடைமுறை அரசியலமைப்புக்கு மாறானது, நீதிபதிகள்


ஆக.22,2017. முஸ்லிம்களின் விவாகரத்து நடைமுறையான முத்தலாக் சட்டம் அரசியலமைப்புக்கு மாறானது என, இந்திய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளதை, இந்திய பெண்ணுரிமை ஆர்வலர்கள் உட்பட, நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

இஸ்லாமில் நடைமுறையிலுள்ள முத்தலாக் குறித்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹார், அப்துல் நசீர் ஆகியோர், முத்தலாக் முறைக்கு ஆறு மாத காலம் தடை விதிக்க வேண்டும்; ஆறு மாதங்களுக்குள் மத்திய அரசு முத்தலாக் ஒழுங்குமுறை சட்டத்தை இயற்ற வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 35 வயது நிரம்பிய ஷயரா பானுவின் கணவர் ரிஸ்வான் அகமது, 2015ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி ஒரு கடிதத்தில், மூன்று முறை "தலாக்" எனக் குறிப்பிட்டு அவரை விவாகரத்து செய்தார். அதன்பிறகு, அவர்களுக்குப் பிறந்த இரண்டு குழந்தைகளையும் அவரது கணவர் அழைத்துச் சென்று விட்டார்.

இதைத்தொடர்ந்து முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் 2016ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி ஷயரா பானு முறையீட்டு மனு தாக்கல் செய்தார்.

இவர் உச்ச நீதிமன்றத்தை நாடிய பிறகே, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து முஸ்லிம் பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் முத்தலாக் வழக்கத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு மூலம், முஸ்லிம் சமுதாய பெண்களின் வாழ்வில் வெளிச்சம் ஏற்பட்டுள்ளது. இதை கொண்டாட வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார் ஷயரா பானு.

ஆதாரம் : Agencies / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.