சமூக வலைத்தளங்கள்:

RSS:

வத்திக்கான் வானொலி

உலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்

மொழி:

திருஅவை \ ஆசியா

பாகிஸ்தான் பாடத்திட்டத்தில் மருத்துவர் Ruth Pfau வாழ்க்கை

Ruth Pfau அவர்களின் சவப்பெட்டியை அடக்கத்திற்கு எடுத்துச் செல்லத் தயாராக நிற்கும் வீரர்கள் - EPA

23/08/2017 15:38

ஆக.23,2017. பாகிஸ்தானில், தொழுநோயுற்றோர் மத்தியில் உழைத்து, அண்மையில் இறையடி சேர்ந்த, அருள்சகோதரியும், மருத்துவருமான Ruth Pfau அவர்களின் வாழ்க்கை வரலாறு, பள்ளி பாட நூல்களில் இடம்பெற வேண்டும் என்று, பாகிஸ்தான் கத்தோலிக்க திருஅவை அரசிடம் விண்ணப்பித்துள்ளது என்று ஆசிய செய்தி கூறுகிறது.

இளையோர் முன்னேற்ற அறக்கட்டளை என்ற பெயரில் பாகிஸ்தானில் செயலாற்றும் மாணவர் அமைப்பு ஒன்று வெளியிட்டுள்ள இந்த விருப்பத்தை, தலத்திருஅவை முற்றிலும் ஆதரித்துள்ளது.

மனித உடலில் உருவாகும் தொழுநோயைக் குணமாக்கிய மருத்துவர் Ruth Pfau அவர்களின் வாழ்க்கை, சமுதாயத்தில் புரையோடிப் போயிருக்கும் வெறுப்பு என்ற தொழுநோயையும் குணமாக்கவேண்டும் என்பதால், இவரது வாழ்வு வருங்காலத் தலைமுறையினரின் பாடத்திட்டத்தில் இடம்பெறவேண்டும் என்று, இளையோர் அறக்கட்டளையின் தலைவர், Shahid Rehmat அவர்கள் கூறினார்.

தன் 87 வருட உலக வாழ்வில், 56 வருடங்களை, பாகிஸ்தானில் தொழு நோயுற்றோருக்கென அர்ப்பணித்த அருள்சகோதரி Ruth Pfau அவர்கள், பாகிஸ்தானின் அன்னை தெரேசா என்று அழைக்கப்படுகிறார்.

ஆகஸ்ட் 10ம் தேதி இறையடி சேர்ந்த மருத்துவர் Ruth Pfau அவர்களின் அடக்கச் சடங்கு, ஆகஸ்ட் 19, கடந்த சனிக்கிழமையன்று கராச்சி, புனித பாட்ரிக் பேராலயத்தில் முழு அரச மரியாதையுடன் நடத்தப்பட்டது என்றும், பாகிஸ்தான் தேசிய கொடியால் மூடப்பட்ட அவரது சவப்பெட்டியை இராணுவ வீரர்கள் சுமந்து சென்று, கிறிஸ்தவ கல்லறையில் அடக்கம் செய்தனர் என்றும் ஆசிய செய்தி கூறியுள்ளது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி

23/08/2017 15:38