2017-08-23 15:15:00

சாம்பலில் பூத்த சரித்திரம் – தொடக்க கால கிறிஸ்தவம் பாகம் 7


ஆக.23,2017. அக்காலத்தில் உறுதியற்றிருந்த உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதி, Visigoths இனத்தவர் போன்ற ஜெர்மானிய ஆக்ரமிப்பாளர்களால் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி, துண்டு துண்டானது. இறுதியில் இத்தாலி மட்டுமே, உரோமையர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. கி.பி.476ம் ஆண்டில், காட்டுமிராண்டி இனத்தைச் சேர்ந்த Odoacer என்பவர், இறுதி உரோமைப் பேரரசர் ரோமுலுஸ் அகுஸ்துசை (Romulus Augustus) வீழ்த்தினார். இதனால் உரோம், வீழ்ச்சியடைந்தது. ஆனால், உரோமைப் பேரரசின் பாதிப் பகுதியாகிய கிழக்கு உரோமைப் பேரரசை அதாவது பைசான்டைன்(Byzantine) பேரரசை, அந்நியரால் அவ்வளவு எளிதில் தாக்க முடியவில்லை. இதன் புவியியல் அமைப்பு, இதற்கு ஒரு காரணம். ஏனென்றால், கிழக்கு உரோமைப் பேரரசின் தலைநகரமாகிய கான்ஸ்டான்டிநோபிள் நகரம், நீர்கால்வாயின் மீது அமைந்திருந்ததால், இதனைத் தாக்குவது கடினமாக இருந்தது. அதோடு, இப்பேரரசு, ஐரோப்பாவோடு மிகக் குறைந்த அளவிலே எல்லைகளைக் கொண்டிருந்தது. மேலும், கிழக்கு உரோமைப் பேரரசுக்கு, உறுதியான நிர்வாகமும், நிலையான அரசியலும் இருந்தன. மத்திய காலத்தில், மற்ற நாடுகளைவிட, இப்பேரரசு அதிகளவில் செல்வத்தையும் கொண்டிருந்தது. இப்பேரரசு, தன் பொருளாதார வளங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் திறனைக் கொண்டிருந்ததோடு, அந்நியர் ஆக்ரமிப்புக்கு எதிராகப் போரிட போதுமான மனித வளங்களையும் கொண்டிருந்தது. இதனால், உரோம் வீழ்ச்சியுற்ற பின்னரும், பல நூற்றாண்டுகளாக, பைசான்டைன் பேரரசு நிலைத்திருக்க முடிந்தது.

பைசான்டைன் பேரரசு, உரோமைச் சட்டத்தாலும், உரோமை அரசியல் நிறுவனங்களாலும் ஆளப்பட்டு, அதிகாரப்பூர்வ மொழி இலத்தீனாக இருந்தது. ஆயினும்,  பைசான்டைன் பேரரசில் கிரேக்க மொழியே பரவலாகப் பேசப்பட்டது. மாணவர்களுக்கு, கிரேக்க வரலாற்றிலும், இலக்கியத்திலும், கலாச்சாரத்திலும் கல்வியளிக்கப்பட்டது. மதத்தைப் பொருத்தவரை, கி.பி.451ம் ஆண்டின் கால்சிதோன் பொதுச்சங்கத்தில் கிறிஸ்தவ உலகம் ஐந்து முதுபெரும்தந்தையர் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றுக்கும் ஒரு முதுபெரும்தந்தை தலைவராக நியமிக்கப்பட்டார். உரோம், கான்ஸ்டான்டிநோபிள், அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா, எருசலேம் என, ஐந்து பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருந்த கிறிஸ்தவ உலகத்தில், உரோம் முதுபெரும்தந்தை பிற்காலத்தில் திருத்தந்தை என அழைக்கப்பட்டார். பைசான்டைன் பேரரசர், கான்ஸ்டான்டிநோபிள் முதுபெரும்தந்தையாக, திருஅவைக்கும், நாட்டிற்கும் தலைவராக இருந்தார். ஏழாம் நூற்றாண்டில், இஸ்லாமியப் பேரரசு, அலெக்சாந்திரியா, அந்தியோக்கியா, எருசலேம் ஆகிய இடங்களைக் கைப்பற்றியபின், பைசான்டைன் பேரரசர், பெரும்பாலான கிழக்குப்பகுதி கிறிஸ்தவர்களின் ஆன்மீகத் தலைவராக இருந்தார்.

பைசான்டைன் பேரரசின் முதல் மாபெரும் பேரரசர் ஜஸ்டீனியன் எனப் போற்றப்படுகிறார். முதலாம் ஜஸ்டீனியன் எனப்படும் இவர், மகா ஜஸ்டீனியன் (Justinian I, Justinian the Great) என்றே அறியப்படுகிறார். தொடக்க கால கிறிஸ்தவத்திற்கு ஆதரவாக இருந்த இவர், கீழை வழிபாட்டுமுறை ஆர்த்தடாக்ஸ் திருஅவையில், புனிதராகப் போற்றப்படுகிறார். கிழக்கு உரோமைப் பேரரசராக, அதாவது பைசான்டைன் பேரரசராக, கி.பி. 527ம் ஆண்டு முதல், 565ம் ஆண்டுவரை இவர் ஆட்சி செய்தார். பேரரசின் மகத்துவத்தை மீண்டும் உயிர்பெறச் செய்யும் வழிகளை இவர் தேடினார். இழந்திருந்த உரோமைப் பேரரசின் மேற்குப் பகுதியை மீண்டும் அடையும் முயற்சியில் இறங்கினார். ஜஸ்டீனியனின் படைகள், மத்திய தரைக்கடல் பகுதியைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்களையும், வட ஆப்ரிக்கா உட்பட, முன்னாள் மேற்கு உரோமைப் பேரரசின் பகுதிகளையும் கைப்பற்றின. துருக்கியிலுள்ள இறைஞானம் அல்லது Hagia Sophia (கி.பி.532-37) ஆலயம் உட்பட, பல சிறந்த நினைவுச்சின்னங்களை இவர் கட்டினார். உரோமன் சட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவந்து, அதை பைசான்டைன் சட்டமாக மாற்றினார். இது, பல நூற்றாண்டுகளுக்கு நடைமுறையில் இருந்தது. நாடுகளின் நவீன கோட்பாடுகளை வடிவமைக்கவும் இது உதவியாக இருந்தது.

பேரரசர் ஜஸ்டீனியன் இறக்கும் காலத்தில், கி.பி.565ம் ஆண்டில், பைசான்டைன் பேரரசு, ஐரோப்பாவில் மிகப் பெரிய மற்றும், அதிக வல்லமைமிக்க பேரரசாக விளங்கியது. போர்களால் பேரரசுக்கு ஏற்பட்டிருந்த கடன்கள், நிதி நெருக்கடியை உருவாக்கின. இதனால் இவருக்குப் பின்வந்த பேரரசர்கள், பைசான்டைன் குடிமக்கள்மீது அதிக வரி விதித்தனர். அதோடு பேரரசின் இராணுவமும் சிறியதாகி, வலிமை குன்றியது. ஜஸ்டீனியன் காலத்தில் இருந்த பேரரசைக் காப்பதற்கு மிகவும் போராட வேண்டிருந்தது. பைசான்டைன் பேரரசு, 7ம், 8ம் நூற்றாண்டுகளில் பெர்சியர்கள் மற்றும் ஸ்லாவியர்களின் தாக்குதல்களுக்கு உள்ளானது. அதனால் பொருளாதாரச் சரிவைச் சந்தித்தது. உள்நாட்டு அரசியலில் நிலையற்ற தன்மையும் உருவாகியது. கி.பி. 622ம் ஆண்டில், மெக்காவில் இறைவாக்கினர் முகமது இஸ்லாமை ஆரம்பித்தபோது பைசான்டைன் பேரரசுக்கு எதிரான அச்சுறுத்தல் கடுமையானது. 

உரோமைப் பேரரசின் வீழ்ச்சி பற்றி அடுத்த வார நிகழ்ச்சியில் நோக்குவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி    








All the contents on this site are copyrighted ©.