2017-08-23 15:02:00

புதன் மறைக்கல்வி உரை : வாழ்வு எப்போதும் அர்த்தமுள்ளது


ஆக.23,2017. “அப்பொழுது அரியணையில் வீற்றிருந்தவர், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்”என்று கூறினார். மேலும், “‘இவ்வாக்குகள் நம்பத்தக்கவை, உண்மையுள்ளவை’என எழுது” என்றார். பின்னர் அவர் என்னிடம் கூறியது: “எல்லாம் நிறைவேறிவிட்டது; அகரமும் னகரமும் நானே; தொடக்கமும் முடிவும் நானே. தாகமாய் இருப்போருக்கு வாழ்வு அளிக்கும் நீரூற்றிலிருந்து நான் இலவசமாய்க் குடிக்கக் கொடுப்பேன். வெற்றி பெறுவோர் இவற்றை உரிமைப்பேறாகப் பெறுவர். நான் அவர்களுக்குக் கடவுளாய் இருப்பேன்; அவர்கள் எனக்கு மக்களாய் இருப்பார்கள் (தி.வெ. 21,5-7)”.

இப்புதன் காலையில், அருளாளர் திருத்தந்தை ஆறாம் பவுல் அரங்கத்தில் நடைபெற்ற, புதன் பொது மறைக்கல்வி உரையின் தொடக்கத்தில், திருவெளிப்பாடு நூல் பிரிவு 21ல், புதிய விண்ணகமும் புதிய மண்ணகமும் என்ற தலைப்பின் கீழுள்ள பகுதியிலிருந்து இந்த இறைச் சொற்கள் வாசிக்கப்பட்டன. பின், அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான பன்னாட்டுப் பயணிகளிடம், அன்புச் சகோதர சகோதரிகளே, காலை வணக்கம் எனச் சொல்லிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்”(தி.வெ.21,5) என்ற இறைவார்த்தையை நாம் இப்போது வாசிக்க கேட்டோம். கிறிஸ்தவ நம்பிக்கை, இறைவன்மீதுள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது என, முதலில் இத்தாலியத்தில் தனது மறைக்கல்வியுரையை ஆரம்பித்தார்.

புதன் மறைக்கல்வியுரைகளில், கிறிஸ்தவ நம்பிக்கை என்ற நற்பண்பு பற்றிய ஆய்வைத் தொடரும் நாம், நம் கிறிஸ்தவ திருப்பயணத்தின் இறுதி முடிவு, விண்ணக எருசலேம் என்பதை, திருவிவிலியத்தின் நிறைவுப் பக்கங்களில் காண்கின்றோம். இத்திருப்பயணத்தில், வியப்புக்களின் கடவுளைச் சந்திக்கின்றோம். நீண்ட மற்றும், கடினமான ஒரு பயணத்திற்குப் பின், வீடு திரும்பும் தன் பிள்ளைகளை வரவேற்கும் தந்தை போன்று, எல்லையில்லா கனிவுடன் நம்மை நடத்துபவர் இக்கடவுள். வெகுகாலமாக துன்பங்கள் நிறைந்த வாழ்வை பலர் அனுபவித்திருந்தாலும்கூட, தம் பிள்ளைகளுக்காக கரையில்லாக் கருணையால் கண்ணீர் சிந்தும் மற்றும், மிகவும் மாறுபட்ட எதிர்காலத்தோடு ஆறுதலளிப்பதற்காக காத்திருக்கின்ற ஓர் இறைத்தந்தை நமக்கு இருக்கின்றார். இவ்வேளையில், வன்முறை மற்றும், போர்களால் மனத்தளவிலும், உடலளவிலும் துன்புற்ற அச்சம் மிகுந்த முகங்களை நினைத்துப் பார்ப்போம். மரணமோ, காழ்ப்புணர்வோ எதுவும் தனது இறுதி முடிவைக் கொண்டிருப்பதில்லை என, கிறிஸ்தவர்களாகிய நாம் நம்புகின்றோம். ஏனென்றால், எல்லாத் தீமைகளும் என்றென்றும் அழிக்கப்படுகின்ற, இறையாட்சி என்ற, மிகப் பரந்த, நீண்ட எல்லையை, மிகுந்த நம்பிக்கையோடு பார்க்கின்றோம். இந்தப் புதிய வருங்காலத்தின் ஒளியாகிய, மற்றும், இப்போதும்கூட நம் வாழ்வில் உடன்வருகின்ற இயேசுவே அந்த இறையாட்சி. தொடக்க நூலில் இறைவனின் படைப்பு ஆறாம் நாளோடு நிறுத்தப்படவில்லை. ஏனென்றால், கடவுள், தொடர்ந்து நம்மைப் பராமரித்து வருகிறார்,  “இதோ! நான் அனைத்தையும் புதியது ஆக்குகிறேன்”(தி.வெ.21,5) என்ற தம் ஆசீரை அறிவிப்பதற்கு எப்போதும் அவர் தயாராக இருக்கின்றார்.

இவ்வாறு, கிறிஸ்தவ நம்பிக்கை பற்றிய தன் புதன் மறைக்கல்வி உரையை நிறைவு செய்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இதில் கலந்துகொண்ட இந்தியா, வியட்நாம் உட்பட பல நாடுகளின் திருப்பயணிகளை வாழ்த்தினார். இயேசு கிறிஸ்து உங்கள் எல்லாரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துவாராக. உலகில் அவரின் அன்புக்குச் சாட்சிகளாக உங்களை ஆக்குவாராக என்றார். பின், இத்தாலியின் இஸ்கியா தீவில் இத்திங்களன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இறந்தவர்கள், காயமுற்றவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு, தனது செபங்களையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்தார். பின் எல்லாருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரை அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.